கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் சிறையில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நவராத்திரி விரதத்தை கடைபிடிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்துகளின் திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத ஒற்றுமையை நிலை நாட்டும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகர் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் சிறையில் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த கைதிகளுடன் இணைந்து நவராத்திரி விரதத்தை கடைபிடித்துள்ளனர்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறும்போது, “முசாபர்நகர் சிறையில் சுமார் 3,000 கைதிகள் உள்ளனர். அதில் 1100 பேர் இந்துக்கள், 218 பேர் முஸ்லிம்கள். ரம்ஜான் புனித மாதத்தில் இஸ்லாமிய கைதிகளுடன் இந்துகளும் நோன்பிருந்தனர். அந்த வகையில் நவராத்திரியை முன்னிட்டு இஸ்லாமிய கைதிகள் இந்துக்களுடன் இணைந்து விரதம் இருந்தனர். விரதம் முடிந்தவுடன் அதற்கான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரதம் இருப்பவர்களுக்கு என பால், பழங்கள், சப்பாத்தி ஆகியவை தயார் செய்யப்பட்டன.” என்றனர்
விரதம் இருந்த இஸ்லாமிய சிறைவாசி ஒருவர் பேசும்போது, “ நாங்கள் இங்கு ஒற்றுமையை போதிக்கிறோம். சிறையில் எப்படி மத நல்லிணக்கம் கடைபிடிக்கப்படுகிறது என்பதை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கு நாங்கள் அனைவரும் இணைந்து வாழ்கிறோம்” என்றார்.
மற்றொரு சிறைவாசி பேசும்போது, “மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக நாங்கள் இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறோம். இந்து சகோதரர்கள் ரமலானில் விரதம் இருக்கும்போது, நாங்களும் அவர்களுடன் இணைந்து நவராத்திரியில் விரதம் இருந்தோம்.அன்புக்கு பதில் அன்பு மட்டுமே” என்றார் .