நியூயார்க் : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய மிக கடுமையான புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 47 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயன் என்ற கடுமையான சூறாவளி புயல், செப்., 28ம் தேதி தாக்கியது. அமெரிக்காவை தாக்கிய மிக மோசமான புயல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.இந்த புயல் கரையை கடந்தபோது, மணிக்கு 241 கி.மீ., வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் கடல் நீர், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள் சேதம் அடைந்தன. ஒரு கோடிக்கும் அதிகமானோர் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்த பல இடங்களில் இப்போது வடியத் துவங்கியுள்ளது. இதில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து பலி எண்ணிக்கை, 47 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நேற்று பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.ஆறுகளில் வெள்ளத்தின் அளவு குறைந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் இரங்கல்
அமெரிக்காவில் புயலால் பலியானேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இந்த கடினமான நேரத்தில், எங்களின் சிந்தனைகள் அனைத்தும் அமெரிக்க மக்களைப் பற்றியதாகவே இருக்கிறது’ என, தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement