வாஷிங்டன்,
அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற ‘இயான்’ புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. இந்தப் புயல், 4-ம் வகை புயலாக கேயோ கோஸ்டா அருகே பெரும் மழையைக் கொண்டு வந்தது.
பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது. இது புளோரிடா மாகாணத்தைத் தாக்கிய பின்னர் மெதுவாக வலுவிழந்து 2-வது வகை புயலாக தரமிறக்கப்பட்டதாக தேசிய புயல் மையம் தெரிவித்தது.
இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் புயல் மற்றும் பலத்த காற்று வீசுவதால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். அவசர நிலை போர்ட் மியர்ஸ் நகரம் உள்பட லீ கவுண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நிலைகுலைய செய்த இயான் புயல் தற்போது தெற்கு கரோலினா மாகாணத்தை புரட்டி எடுத்து வருகிறது. இதனிடையே புளோரிடா மாகாணத்தில் இயான் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.