புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற மாதம் அக்டோபர் மாதம். அவர் பௌத்தத்தை ஏற்று (1956) 66 ஆண்டுகள் ஆகின்றன. அவர் பௌத்தத்தை ஏற்றதற்குக் கூறிய காரணங்கள் இன்றும் பொருந்துகின்றனவா? என்பது பற்றி விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கட்டுரை தொடர் ஒன்றை எழுதி வருகிறார்.
அதன்படி, அம்பேத்கரின் மதமாற்ற முடிவுக்கு தமிழ்நாட்டில் எழுந்த எதிர்வினைகள் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: “புரட்சியாளர் அம்பேத்கர் இந்து மதத்தைத் துறந்து பௌத்தத்தை ஏற்ற அக்டோபர் 14க்குப் பிறகு ஒரு வாரம் கழித்து அக்டோபர் 21 , 1956 இல் திராவிட நாடு இதழில் பேரறிஞர் அண்ணா அதை வரவேற்று விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அம்பேத்கரின் மதமாற்றம் குறித்து தமிழ்நாட்டில் வெளியான விரிவான எதிர்வினை அண்ணாவினுடையது தான் எனத் தெரிகிறது.
மூன்று லட்சம் பேரோடு அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்தத்தைத் தழுவிய செய்தியை புகழ்ந்து பாராட்டி அண்ணா அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். “ இதுவரை வரலாற்றில் இடம் பெறாத ஒரு நிகழ்வு இது “ என்று அவர் குறிப்பிடுகிறார். “ ஒரே இடத்தில் ஒரே நாளில் ஆடவரும் பெண்டிரும் சிறார்களுமாகச் சேர்ந்து மூன்று லட்சம் மக்கள் ஒரு மதத்தை விட்டு வேறொரு மதம் புகுந்த சம்பவம் அதிலும் இந்து மதத்தை விட்டு புத்தமதம் தழுவிய செய்தி – இது வரலாற்றில் இடம்பெற்றிருக்கவில்லை” என்று அவர் வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
“ டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தின் உள்ளடக்கத்தை நன்கு கற்று இருப்பவர். அவர் கற்காத இந்து மதத் தொடர்புடைய வடமொழி வேதாகம நூல்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்க கூடிய அளவிற்கு சட்ட நூல் பயிற்சி பெற்றிருப்பவர். அத்தகைய ஒரு பேராசிரியர் இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு மூன்று லட்சம் மக்களுடன் புத்த நெறியை மேற்கொண்டார் என்பது சாதாரணமானவர்கள் இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கி விட்ட சம்பவம் போல் கருதக்கூடியது அல்ல” என்று இந்த மதமாற்றத்தின் சிறப்பை அண்ணா குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த மதமாற்றத்தை அலட்சியப்படுத்துகிறவர்கள், கேலி செய்கிறவர்கள், கண்டும் காணாமல் கடந்து போகிறவர்கள் எல்லோரையும் கடுமையாக அண்ணா விமர்சித்திருக்கிறார்.
“ இந்து மதத்தை விட்டு மக்கள் ஏன் கூட்டம் கூட்டமாக எப்பொழுதும் வெளியேறி வருகிறார்கள் என்பதற்கான மூல காரணத்தைத் தேடிக் கண்டறிந்து அதை களைந்தெறிய வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் ஆளவந்தார்களுக்குக் குறைவாக இருக்கலாம் என்று கூட அவர்கள் கருதலாம். ஆனால், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் நிலை அதுவாக இருக்க முடியாது.
தனது மதிப்புக்கும், வருவாய்க்கும் இந்து மதத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்து உயர்நிலையில் வீற்றிருப்பவராவர், சங்கராச்சாரியார். எப்பொழுதும்போல், சரிந்து வரும் தனது மதிப்பையும், குறைந்துவரும் தனது வருவாயையும், இருக்கும் நிலையளவாவது பாதுகாத்துக் கொள்ளும்” விதத்தில்தான் சங்கராச்சாரியாரின் அணுகுமுறை அமைந்திருக்கிறது என அவர் சாடியுள்ளார்.
“ இந்து மதத்தை மற்றவர்கள் விரும்பி ஏற்கும் வகையில் இல்லையானாலும், இருக்கிறவர்களாவது தாங்கள் இறக்கும்வரை அதிலேயே ஒட்டிக்-கொண்டு இருக்கும் வகையில், அதைப் புனிதமுடையதாக ஆக்கும் விருப்புக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை” எனவும் அண்ணா விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் இருக்கிற இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அயல்நாடுகளில் இருந்து வந்தவர்கள் இல்லை, அவர்கள் இந்த மதங்களை ஏற்பதற்கு முன்பு இங்கே இருந்தவர்கள் தான் என்பதை அண்ணா எடுத்துக்காட்டுகிறார்: “அரேபியாவில் இருந்து இஸ்லாம் மார்க்கம் தான் இறக்குமதியாகிவிட்டதே தவிர, இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அங்கிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அன்று. என்றோ ஒருநாள் இந்து மதத்தில் இருந்தவர்கள் தான் இன்று முஸ்லிம்களாக இருப்பவர்கள்” என்று கூறியுள்ள அண்ணா , “அன்றொரு காலத்தில் நூற்றுக்கணக்கில் இருந்து வந்த முஸ்லிம்கள் இன்று 9 கோடி என்ற கணக்கில் பெருகிவிட்டனர் என்பதற்குரிய நியாயமான காரணத்தை இந்து மதத்தில் தான் கண்டுபிடித்தாக வேண்டும்” என மதமாற்றம் நடைபெறுவதற்குக் காரணம் இந்து மதத்தின் பாரபட்சமான அணுகுமுறைதான் என சுட்டிக் காட்டுகிறார்.
இந்து மதத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் கொடுங்கோன்மையான போக்கின் காரணமாக அதிலிருந்து பலரும் வெளியேறத்தான் செய்வார்கள் என்பதே அண்ணாவின் கருத்து. “தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்” என்று கூறிய அண்ணா, “ டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்.” என்று தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் சகிப்புத்தன்மை அற்றதாக இந்துமதம் ஆக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் பேரறிஞர் அண்ணா இப்போது இருந்தாலும் இந்துமதத்தை விட்டு வெளியேறுவது நியாயமானது என்றுதான் கூறியிருப்பார்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.