அம்பேத்கர்… கலாம் எந்த சாதி?; பாடப்புத்தகத்தில் பகீர் கேள்வி!

சின்மயா மிஷன் என்கிற பெயரில் இந்து அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு நாடு முழுவதும் ஏராளமான கல்வி நிலையங்களை நடத்தி வருகிறது. மேலும் பள்ளி பாடப்புத்தகங்களை தயாரித்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா என்கிற பள்ளி, சின்மயா மிஷன் தயாரித்துள்ள புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அமைப்பு தயாரித்துள்ள 6ம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் மனிதர்கள் அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று 4 வகையாக பிரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரிக்கப்பட்ட வர்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்டோர் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்கிற கேள்வியும் அதே பாடப்புத்தகத்தில் கேட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சின்மயா மிஷன் அமைப்பின் சார்பில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு படிக்க வழங்கப்பட்டு இருக்கும் இந்த வரலாற்று பாடப்புத்தகத்திற்கு ‘ரேடியன்ட் பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சமத்துவத்தை கற்க வேண்டிய வயதில் மாணவ மாணவிகள் மனதில் வர்ணாசிரமத்தை தொகுத்து அதனடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:

பள்ளி மாணவ மாணவிகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் பாடப்புத்தகத்தில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டு உள்ளது மிகவும் கண்டனத்துக்கு உரியதாக கருகிறோம். இது தெரியாமல் நடந்ததாக இருக்க முடியாது.

மாணவ மாணவிகளிடம் வேண்டுமென்றே வர்ணாசிரமத்தை புகுத்துவது போல் உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கடுமையுடன் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.