மும்பை: அரசு அதிகாரிகள் பொது மக்களிடம் பேசும்போது ‘ஹலோ’ என்று செல்வதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மகாராஷ்டிரா அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், ெபாதுமக்களிடமிருந்து தொலைபேசி அல்லது செல்போன் அழைப்புகள் வந்தால், இனிமேல் ‘ஹலோ’ என்று செல்வதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் மாநில அரசு அதிகாரிகள், தங்களை சந்திக்க வரும் மக்களிடமும், அவர்களை வரவேற்கும் விதமாக ‘வந்தே மாதரம்’ வாழ்த்துச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதனை மக்களிடமும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ‘ஹலோ’ என்ற சொல்லானது, மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்தைப் பின்பற்றுவதாகும்.
இந்த ஹாலோ என்ற சொல்லுக்கு எந்தவொரு குறிப்பிட்ட பொருளும் இல்லை. ஒருவருக்கு ஒருவரை அன்பை பகிர்ந்து கொள்ளும் சொல்லாகவும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் சுதிர் முங்கந்திவார் கூறுகையில், ‘நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடி வருகிறோம். அதனால், அரசு ஊழியர்கள் இனிமேல் வணக்கம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்; அதற்கு மாறாக வந்தே மாதரம் என்ற சொல்லை பொதுதளங்களில் பயன்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.