தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள்வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுநாளும் இன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர்.
அந்தவகையில், சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேருவே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஒழிக்க நினைத்தார், ஆனால் முடியவில்லை. தனிமனிதர்களால் ஆர்எஸ்எஸ் அமைப்பை எப்போதும்ஒழிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் நேற்று வந்த இயக்கம் அல்ல.பல லட்சம் தொண்டர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து உருவாக்கப்பட்ட இயக்கம்.
ஏழைகளின் கல்விக்காக பட்டி தொட்டியெங்கும் பள்ளிகள் திறந்ததோடு மதிய உணவும் வழங்கி, கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் சிலைக்கு கட்சி தொண்டர்களுடன் இணைந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன்.#Kamarajar pic.twitter.com/8MDqEbXCcu
— Dr.L.Murugan (@Murugan_MoS) October 2, 2022
இன்று அனைத்து வீடுகளிலும் பள்ளிகளுக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டு, தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது அதற்கு காரணம் பிரதமர் மோடி. காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம் ஆகும். ஏழை, எளிய குழந்தைகள் கல்வி கற்பதற்கு மதிய உணவை அமல்படுத்தியவர். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் மிகப்பெரிய அனை கட்டப்பட்டது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மேம்பாட்டுக்கு உட்கட்டமைப்பு பணிகளை செய்தது காமராஜர் ஆட்சி காலத்தில்தான்” என்றார்.
முன்னதாக காந்தி ஜெயந்தியான இன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழக காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்துவிட்டது. இதனையடுத்து நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேசமயம், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் இன்று புதுச்சேரியில் பேரணி நடைபெற்றது. அதில் அம்மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆர்.எஸ்.எஸ் உடையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.