சிவா சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், பா.ஜ.க கூட்டணி அரசு நடைபெற்றுவரும் மகாராஷ்டிராவில், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு, `ஹலோ’ என்று கூறாமல் `வந்தே மாதரம்’ என்று கூறவேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான சுற்றறிக்கையை, மாநில பொது நிர்வாகத் துறை நேற்று வெளியிட்டது. இந்த உத்தரவு இன்று முதல் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதமே, அமைச்சர் சுதிர் முங்கந்திவார் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசின் சுற்றறிக்கையின்படி அரசு ஊழியர்கள் அனைவரும், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து அழைப்புகளைப் பெறும்போது, `ஹலோ’ என்பதற்கு `வந்தே மாதரம்’ என்று கூறவேண்டும். மேலும் இது அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
அதோடு இந்த சுற்றறிக்கையில், ‘ஹலோ’ என்ற வார்த்தை அர்த்தமற்றது என்றும், ‘வந்தே மாதரம்’ என்று உரையாடலைத் தொடங்குவது நேர்மறையான சூழ்நிலையை உருவாக்க உதவும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா அரசின் இந்த புதிய உத்தரவை பா.ஜ.க பாராட்டியிருக்கும் வேளையில், சமாஜ்வாடி கட்சி இதனை, `மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக-வின் மற்றொரு முயற்சி. பா.ஜ.க-வின் அழுத்தத்திற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அடிபணிந்துவிட்டார்’ எனச் சாடியுள்ளது.