`இப்படியே போனால் பருவமழையின்போது அவ்ளோதான்…’- அதிகாரிகளை கடிந்துகொண்ட தலைமைச் செயலர்

“மழைநீர் வடிகால் பணிகள் தூர் வாரும் பணிகள் மிகவும் தொய்வாக நடைபெற்று வருகின்றது. அதனால்தான் பணிகள் விரைவாக முடிக்கப்படவில்லை” என தலைமைச் செயலாளர் இறையன்பு துறை அதிகாரிகளிடம் கடிந்து கொண்டிருக்கிறார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் பணிகள், நீர் வழி தடங்களில் வடிகால் பணி, தூறு வாரும் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் வந்து ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பொதுப்பணி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை இறையன்பு இன்று காலை நேரில் பார்வையிட்டார். இன்று சென்னை மாநகராட்சி பகுதிகளில் 11 இடங்களில் நேரில் ஆய்வு செய்ய உள்ள தலைமைச் செயலர் இறையன்புவுடன் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் கலந்து உடன் இருந்தனர்.
image
முதல் பகுதியாக திருவான்மியூரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் தலைமைச் செயலர் ஆய்வு செய்த நிலையில், அடுத்ததாக பள்ளிக்கரணை செல்ல உள்ளார். இணைப்புக் கால்வாய்களின் உள்ள அடைப்புகளை சீர்படுத்துவது, மதகுகளை ஒழுங்குபடுத்துவது, ஆகாயத்தாமரை அகற்றுவது போன்ற பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தலைமைச் செயலர் இறையன்பு இன்று நண்பகல் வரை ஆய்வு மேற்கொள்ள உள்ளார். திருவான்மையூரில் தலைமைச் செயலர் ஆய்வு செய்த போது ஆகாயத்தாமரை அகற்றும் தூர்வாரும் பணிகள் முடிவடையாமல் இருந்த நிலையில் அதிகாரிகளை தலைமைச் செயலர் கடிந்து கொண்டார்.

குறிப்பாக அதிகாரிகளிடம் தலைமைச் செயலர் “நாம் இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்யவில்லை என்றால் நிச்சயமாக நம்மால் பருவமழையை எதிர்கொள்ள முடியாது. எனக்கு தெரியாதா உங்கள் துறையை பற்றி…. நீங்கள் மனசு வைக்கவில்லை இவ்விஷயத்தில். ஒருவேளை நீங்கள் மனசு வைத்திருந்தால் இந்த பணி எப்போதோ முடிந்திருக்கும். இது ஒரே நாளில் பந்தல் போடும் துறையல்ல. வேலையும் அல்ல” என கூறினார். மீண்டும் 7 ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அப்போது சரி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.