இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான 97 வயதான ஆர்.நல்லகண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில், காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து மருத்துவமனையின் டீன் டாக்டர்.தேரணிராஜன், “நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. பொது மருத்துவர்கள் மற்றும் சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். அதோடு, எச்.1.என்.1 வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஏதேனும் அவருக்கு உள்ளதா என்ற பரிசோதனையும் நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார். இந்த செய்தியறிந்த அரசியல் தலைவர்கள் பலரும், நல்லகண்ணுவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
சுதந்திர தினத்தன்று தமிழக அரசால் தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சம் பெற்ற நல்லகண்ணு, அதே மேடையிலேயே தனக்கு வழங்கப்பட்ட தொகையுடன் மேலே ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.