கான்பூர்: உ.பி.யில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் டிராக்டரில் சென்ற 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் 25 பேர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உ.பி. மாநிலம் கான்பூரை சேர்ந்த கிராமவாசிகள் பலர் டிராக்டர் ஒன்றில் உனோவ் மாவட்டத்தில் உள்ள கோயில் விழாவில் பங்கேற்றுவிட்டு கான்பூர் திரும்பி கொண்டிருந்தனர். கதாம்பூர் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது அதில் பயணித்த 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமுற்றவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பலியானவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் , காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘‘விபத்து குறித்து கேள்விப்பட்டுதும், மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்துககு விரைந்துள்ளனர். மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.