கள்ளக்குறிச்சி: சக ஊழியர்களை சுங்கச்சாவடி நிர்வாகம் பணி நீக்கம் செய்ய நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பணியில் உள்ள சக ஊழியர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை-திருச்சி-சேலம் சாலையில் செல்லும் வாகனங்கள் சுங்கக் கட்டண பிடித்தமின்றி பயணிக்கின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சியில் 2009 முதல் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. ‘ஃபாஸ்ட் டேக்‘ கட்டண வசூல் முறை வந்த பிறகு ஆட்குறைப்பில் சுங்கச்சாவடி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஊழியர்களில் 28 பேரை பணி நீக்கம் செய்துவது தொடர்பாக கடந்த செப்.29-ம் தேதி நோட்டீஸ் வழங்கியது. அதில், ‘வரும் அக்.1 முதல் வேலைக்கு வர வேண்டாம்’ என கூறியதாகத் தெரிகிறது.
இதனால் அதிருப்தியடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் கார்ல் மார்க்ஸ் தலைமையில் நேற்று முன்தினம் முதல் இந்த சுங்கச் சாவடியில் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் சுங்கக் கட்டணம் பிடித்தமின்றி பயணித்து வருகின்றன. தற்போது சனி, ஞாயிறு, அதைத்தொடர்ந்து தசரா பண்டிகை விடுமுறை என்பதால் வாகனங்கள அதிக அளவில் பயணிக்கும் சூழல் உள்ளது. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
வட்டாட்சியர் மணிமேகலை தலைமையில் சுங்கச் சாவடி நிர்வாகத்தினர் ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.