திருமலை: வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று நடந்த முக்கிய விழாவான கருட சேவையில் 3 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் தொடங்கி சின்ன சேஷ வாகனம், அன்னம், சிம்மம், முத்து பந்தல், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் மாய மோகத்தை போக்கும் விதமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும், நாச்சியர் திருகோலத்தில் உள்ள தனது உருவத்தை (மகாவிஷ்ணு) கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்து வருவதாக மற்றொரு பல்லக்கில் நாச்சியாருடன் ஸ்ரீகிருஷ்ணரும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வீதியுலாவில் சுவாமியை தரிசிக்க லட்சக்கணக்காண பக்தர்கள் 4 மாடவீதியில் இருபுறமும் திரண்டனர். இதில் பக்தர்களின் மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், கோலாட்டம், ஆடியபடி பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில், மலையப்ப சுவாமி தங்கம், வைரம், பச்சை, மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் லட்சக்கணக்காண பக்தர்களின் மத்தியில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இந்த விழாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகளும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களில் வேடம் அணிந்து பக்தர்கள் வந்தனர். இதனையொட்டி, மாடவீதியில் வலம் வந்த கருட சேவையை காண காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பால், மோர், அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் 24 மணிநேரமும் அரசு பஸ்கள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டது. பிரமோற்சவத்தின் 6வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு கஜ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.