ஐஆர்டிஏ புதிய நடைமுறை வந்தால் 10 லட்சம் முகவர்கள் காணாமல் போவார்கள் – எல்ஐசி ஏஜெண்டுகள் போராட்டம்!

காப்பீடு துறையில் முன்னணி இடத்தை தன் வசம் வைத்துள்ள எல்.ஐ.சியின் வளர்ச்சிக்கு அதன் முகவர்களும் முக்கிய காரணம். நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் மேலான முகவர்கள் உள்ளனர். மக்களிடம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைக் கொண்டு செல்வது இவர்களின் வேலையாக இருக்கிறது. இதற்கு கணிசமான கமிஷன் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஐஆர்டிஏ புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள் முகவர்களை வஞ்சிப்பதாக இருக்கிறது என்று எல்ஐசி முகவர்கள் கூட்டமைப்பு (LIAFI) கூறுகிறது. இந்த முன்வரைவை எதிர்த்து செப்டம்பர் 30 வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பல இடங்களில் எல்ஐசி ஏஜெண்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்ஐசி ஏஜெண்டுகள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது, “நாட்டின் வளர்ச்சியிலும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் கணிசமான பங்களிப்பை எல்.ஐ.சி கொடுத்துள்ளது. அதற்கு காரணம் நாடு முழுவதுமுள்ள பல லட்சக்கணக்கான ஏஜெண்டுகள். தற்போது ஏஜெண்டுகளுக்கான கமிஷனை ஐஆர்டிஏ முன்வரை குறைக்க திட்டமிட்டுள்ளது.

25 சதவிகித கமிஷன் தற்போது கொடுக்கப்பட்டுவருகிறது. இதை 20 சதவிகிதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இது முகவர்களின் நலனை வெகுவாகப் பாதிக்கும். பல ஆயிரக்கணக்கான ஏஜெண்டுகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஏஜென்டாக கழித்திருக்கிறார்கள். அவர்கள் கமிஷனைத் தவிர பெரிதாக எந்த வருமானத்தையும் ஈட்டவில்லை. அப்படியிருக்க கமிஷனையும் குறைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள். 13 லட்சம் ஏஜெண்டுகளில் 10 லட்சம் ஏஜெண்டுகள் ஒரு ஆண்டில் காணாமல் போய்விடுவார்கள்.

எல்ஐசி ஏஜெண்டுகள் போராட்டம்

கமிஷனை குறைக்கக் கூடாது என்ற கோரிக்கை மட்டுமல்லாமல், பணிக்கொடையை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு வசதி தர வேண்டும். முக்கியமாக பாலிசிதாரர்களை பாதிக்கும் ஜிஎஸ்டியை இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு ரத்து செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர்.

அவர்களின் கோரிக்கைகள்:

பாலிசிதாரர்களுக்காக…..

1) பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும்.

2) பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்.

3) வெளிநாட்டு பாலிசிதாரருக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும்.

4) அனைத்து வித விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை ரசீது (Acknowledgement) தர வேண்டும்.

5) 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்.

6) சிட்டிசன் சார்ட் படி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து சேவைகளும் வழங்கப்பட வேண்டும்.

எல்ஐசி ஏஜெண்டுகள் போராட்டம்

7) பாலிசிதாரர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

8) பலமுறை KYC க்காக ஆவணங்கள் கேட்பதை தவிர்க்க வேண்டும்.

9) ஒரே இடத்தில் பாலிசி அச்சடிப்பது மற்றும் அனுப்புவதை நிறுத்த வேண்டும். பழைய முறையையே பின்பற்ற வேண்டும்.

10) புதிய பாலிசி மற்றும் பாலிசியின் சேவைகள் மீதான GST வரியை நீக்க வேண்டும்.

முகவர்களுக்காக…..

1) பணிக்கொடையை ரூ.5 இலட்சத்தை விரைவாக வழங்கிட வேண்டும்

2) IRDAI Gazette (2013 & 2016) உத்தரவின்படி கமிஷனை உயாத்தித்தர வேண்டும்.

3) மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

4) குழு காப்பீடு வயது மற்றும் தொகையை உயர்த்த வேண்டும்.

5) முகவாண்மைக் குழு காப்பீடு உயர்த்தப்பட வேண்டும். (Agency Term Insurance}

6) மன்ற உறுப்பினர் விதிமுறைகளில் JAC பரிந்துரை செய்தபடி மாற்றம் கொண்டு வரவேண்டும்.

7) நேரடி முகவர்களுக்காக கூடுதல் பணப்பயன்களை வழங்கிட வேண்டும்.

8) முகவர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கடன் வழங்கிட வேண்டும்.

9) வீட்டு வசதிக் கடன் 5% வட்டியில் வழங்கப்பட வேண்டும்.

10) பிரீமியம் பாய்ண்ட் (Premium Point) ஒரு ரசீதிற்கு ரூ.20 ஆக உயர்த்த வேண்டும்.

11) முகவர் நல நிதி திட்டம் (Welfare Fund) அமைக்க வேண்டும்.

12) முகவர்களை தொழில் முறையாளராக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

13) முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

CLIA க்களுக்காக…..

1) 5 வருடம் CLIA முடித்தவர்களுக்கு முகவர் மன்ற விதிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

2) CLIA மூலமாக வருகின்ற அனைத்து விதமான வருமானத்தையும் முன்பணம் பெறுவதற்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவர்களுடைய கோரிக்கைகளை ஐஆர்டிஏ ஏற்குமா அல்லது இவர்களது போராட்டம் தொடருமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.