கோவை: ஓசி பேருந்து பயணம் வேண்டாம் என்ற வீடியோ தொடர்பாக அதிமுக தொண்டர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தமிழக அரசின் சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளை பார்த்து அமைச்சர் க.பொன்முடி, ‘ஓசி பஸ்ல போறீங்க’ என்று இழிவுபடுத்தும் விதமாக பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களை இழிவுபடுத்தி அவர் பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இந்நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கண்ணமநாயக்கனூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்ய மதுக்கரை மார்கெட் பகுதியில் பேருந்தில் ஏறிய ஒரு வயதான பெண்மணி நடத்துனரிடம் டிக்கெட் கேட்டு கட்டணம் கொடுத்துள்ளார். நடத்துனர் பணம் வேண்டாம் என மறுத்துள்ளார். அதற்கு அந்த வயதான பெண்மணி, எனக்கு ஒசிப் பயணம் வேண்டாம் என கூறி பயணித்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிகழ்விற்கு அதிமுகவின் தொண்டர்கள்தான் காரணம் என்று ஆர்.பிருத்திவிராஜ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசின் கைபாவையாக ஒருதலைபட்சமாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. தற்போது காவல்துறையினர் அதிமுக தொண்டர் பிருத்திவிராஜ் மீது பதிவு செய்த பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஜனநாயக ரீதியாக முற்றுகை போராட்டம் நடைபெறும். ஒசி பஸ் பயணம் என ஏளனம் செய்த அமைச்சரின் பேச்சை கண்டிப்பதை விடுத்து தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிமுக தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ததை வாபஸ் வாங்க வேண்டும். கண்ணியமிக்க காவல்துறையை, சட்டம், ஒழுங்கு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.