ஓசி பஸ் என்கிறார்கள்… இலவச பயணத்தை புறக்கணியுங்கள் – பிரேமலதா வேண்டுகோள்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியளர்களைச் சந்தித்த அவர், ”ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லை, வசதியானவர்கள்தான் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க போகின்றனர் என அமைச்சர் கூறுகிறார். இப்படி கூறுவதற்கு எதற்காக ஒரு அமைச்சர்? பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு எளிதில் செல்ல முடியாத அளவிற்கு அரசுப் பேருந்துகள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன.

அரசுப் பேருந்துகள் கிடைக்காத காரணத்தால் மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படி பயணிக்கும்போது அளவுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேருந்துக்கே அதிகம் செலவழித்தால் ஊரில் போய் எப்படி பண்டிகை கொண்டாட முடியும்?

எல்லாமே இங்கு வியாபாரம்தான் என்றால், அரசாங்கமும் வியாபார ரீதியாக நடக்கிறதா? மக்களுக்கான அரசு இது இல்லையா என்ற கேள்வி எழுகிறது. மகளிருக்கான இலவசப் பயணம் குறித்த அமைச்சர் பொன்முடியின் கருத்தை கண்டிக்கிறேன். அதிமுக சார்பில் முதிய பெண்மணியை தூண்டி இலவச பயணத்துக்கு எதிராக பேசி வீடியோ பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அது உண்மையாகவே இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

முன்னதாக, அமைச்சர் பொன்முடி விழா ஒன்றில் பேசுகையில், “ஓசி பஸ்லதானே போறீங்க” என பேசியது தமிழ்நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது. இதனையடுத்து கோவையில் மூதாட்டி ஒருவர் பேருந்து நடத்துனரிடம், எனக்கு ஓசி பயணம் வேண்டாம் என கூறி பணம் கொடுத்து டிக்கெட் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அந்த  மூதாட்டிக்கு பணம் கொடுத்து அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிருத்விராஜ் என்பவர் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார் என பேச்சு எழுந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.