ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தோட்டத்தில் கண்ணி வைத்ததில் சிறுத்தை பலி… ஒரு கைது! – என்ன நடந்தது?

​தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை ​​வனப்பகுதியி​ல் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில்​அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் ​செப்டம்பர் ​27-ம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கியிருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் ​கிடைத்துள்ளது. அதனடிப்படையில், வனத்துறையினர் மின்வேலியில் சிக்கியிருந்த இரண்டு வயது சிறுத்தையை காப்பாற்ற முயன்றபோது அது தானாகவே மின்வேலியிலிருந்து தப்பி ஓடியதாகவும், தப்பிச் செல்லும்போது தேனி உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை தாக்கிவிட்டுச் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்​.​ 

காயமடைந்த மகேந்திரன்

​மறுநா​ள் அதேபகுதியில் ஒரு சிறுத்தை மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதாக​ தகவல் கிடைக்க, சிறுத்தையை மீட்ட​ வனத்துறையினர்​ கால்நடை மருத்துவர்க​ளை​ வரவழை​த்து அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் குழி தோண்டி சிறுத்தை​யை​​ ​எரி​த்துள்ளனர். 

இந்தச் சம்பவ​த்தில் ​சந்தேக​ம் உள்ளது எனவும், இது குறித்து தேனி மாவட்ட வன அலுவலர் விரிவாக விசாரி​த்து தவறு நடந்திருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ​​வன உயிரின ஆர்வலர்கள்​ வலியுறுத்தியிருந்தனர்.​

​சிறுத்தை மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ​பகுதி தேனி ​எம்.பி., ரவீந்திரநாத்துக்குச் சொந்தமான இடம்​.​ வனவிலங்குகள் வருவதை தடுக்க தனது இடத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைத்து இருந்தார். ​அதில் சிக்கித்தான் சிறுத்தை உயிரிழந்துள்ளது. 

இந்த நிலையில் சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் தேனி ​எம்.பி-யின் தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த ராமநாதபுரம் மாவட்ட​த்தைச் ​சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர்மீது வழக்கு பதிவுசெய்து வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சிறுத்தை

அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருடன் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் ​மாநில பொதுச்செயலாளர் ​ச​​​​​ரவணன் சிறுத்தை உயிரிழந்த இடத்தை பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வனத்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள அப்பாவிகள்மீது பொய் வழக்கு பதிவுசெய்து அடித்து​​ உதைத்து சித்திரவதை செய்​துள்ளனர். ​

சரவணன்

சிறுத்தையைக் கொன்ற வனத்துறையினர் கிடை போட்டு பிழைப்பவரை பலிகிடாவாக்கியுள்ளனர். ​இது மனித உரிமை மீறல் ​ஆகும். இ​தனைக் கண்டித்து தமிழகம் முழுவதுமுள்ள கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம்” எனத் தெரிவித்தனர்​.

அலெக்ஸ் பாண்டியனின் தந்தை செளந்தரபாண்டியன், “கடந்த 6 மாதங்களாக ஓ.பி.எஸ்., தோட்டத்தில் கிடை போட்டுள்ளோம். வனத்துறையினர் நாங்கள் கிடை போட்டிருந்த இடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் சிறுத்தை செத்துக்கிடந்ததாகக் கூறி விசாரித்தனர். இதையடுத்து 3 நாள்களுக்குப் பிறகு கிடையில் இருந்த என் மகன் அலெக்ஸ் பாண்டியனை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, பிறகு `சிறுத்தையை தாக்கிய குற்றத்திற்காக கைதுசெய்துள்ளோம்’ எனக் கூறுகின்றனர்” என்றார்.

கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர்

​இது குறித்து தேனி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) குருசாமி தபாலாவிடம் பேசினோம். “விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முடிந்த பிறகுதான் இது தொடர்பாக தகவல்களை தெரிவிக்க முடியும். கைதுசெய்யப்பட்டுள்ள அலெக்ஸ்பாண்டியன் ஆடுகளை வனவிலங்குகள் தாக்காமல் இருக்க கன்னி வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனடிப்படையில் அவரைக் கைதுசெய்துள்ளோம்” என்றார்.

வனத்தை ஒட்டிய பட்டா நிலம்

​​உதவி வன பாதுகாவலர் மகேந்திரனிடம் பேசினோம். “என்னை தாக்கிவிட்டு தப்பியது பெண் சிறுத்தை. வேலியில் சிக்கி உயிரிழந்தது ஆண் சிறுத்தை. தேனி எம்.பி-க்குச் சொந்தமான இடத்தில்தான் அலெக்ஸ் பாண்டியன் கிடை போட்டுள்ளார். செப்டம்பர் 18-ம் தேதி அவருடைய கிடையிலிருந்து 2 ஆடுகளைக் காணவில்லை. வனவிலங்குதான் ஆடுகளை அடித்துச் சென்றிருக்கக்கூடும் என அவர் வேலியில் கன்னி அமைத்துள்ளார். அதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். அதனால் அவரைக் கைதுசெய்துள்ளோம். பொய் வழக்கு ஏதும் பதியவில்லை. அடுத்தகட்டமாக தோட்டத்தின் மேலாளரிடம் விசாரித்து வருகிறோம். அவர்கள்மீது உரிய ஆதாரங்களுடன் இடத்தின் உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ​

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.