காந்தி ஜெயந்தி : 1.85 லட்ச மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர். சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 ஈஷா நாற்று பண்ணைகள் மூலம் தரமான டிம்பர் மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை அவர்களின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்த மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியை இந்த இயக்கம் மேற்கொண்டது. அதன்படி, மொத்தம் 37 மாவட்டங்களில் சுமார் 600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் 1.85 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் சுமார் 1000 விவசாயிகள் பங்கேற்று, கடந்த செப். 29ஆம் தேதி முதல் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனர். 

விவசாயிகளின் பொருளாதார தேவை மற்றும் அவர்களின் மண் மற்றும் நீரின் தன்மைக்கு ஏற்ப தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற பல்வேறு டிம்பர் மரங்களை வரப்பு ஓரமாகவும், தொகுப்பு மரங்களாகவும் நடவு செய்துள்ளனர்.

Isha, ஈஷா

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 2.5 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நடப்பட்டுள்ளன. மேலும், கடந்தாண்டு காந்தி ஜெயந்தியின் போது இதே போல் சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.