காரைக்கால்: காரைக்காலில் இன்று மாலை ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடத்தப்படவுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தமிழகப் பகுதிகளிலிருந்து ஆட்களை கொண்டுவரப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என விடுதலை சிறுத்தைகள், திமுக கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆர்எஸ்எஸ் சார்பில் அக்.2-ம் தேதி தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை சுட்டிக் காட்டி ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் ஊர்வலம், கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் காரைக்காலில் விசிக மனித சங்கிலி நடத்தவும், ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி, பொதுக்கூட்டம் நடத்தவும் காவல் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் மனித சங்கிலி நடைபெற்றது. மாலை ஆர்எஸ்எஸ் சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நிறைவு, விஜயதசமி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து அணிவகுப்பு ஊர்வலம் புறப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து கடற்கரை சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை காரைக்கால் பாரதியார் சாலையில், புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாக தியாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு செயலாளர் அரசு. வணங்காமுடி உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மமக, நாம் தமிழர், திராவிடர் கழகம், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு செயலாளர் அரசு. வணங்காமுடி செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தில் திமுக அரசின் நல்லாட்சியை சீர் குலைக்க பாஜகவும், சங் பரிவார் அமைப்புகளும் தொல்லைகள் கொடுத்து வருகின்றன. கண்டிப்பாக இதனை முறியடிப்போம். காரைக்காலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடத்தப்படவுள்ள பேரணிக்காக தமிழகப் பகுதிகளிலிருந்து ஆட்களை கொண்டுவரவுள்ளதாக கேள்விப்பட்டேன். காரைக்காலில் உள்ள அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். காவல்துறை தலைமை இதனை அனுமதிக்கக்கூடாது” என்றார்.
சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் கூறியது: ”தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஏதாவது ஒரு கலாட்டா செய்து, அதனை வாக்குகளாக மாற்றி ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்று பாஜகவும், அதை சார்ந்த அமைப்புகளும் தொடர்ந்து பல பொய் பிரச்சாரங்களை தூண்டி விட்டு, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அதில் அவர்கள் தோற்றுப் போவார்கள். புதுச்சேரி மாநிலம் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய பகுதி. அதை சீர்குலைக்கும் வகையில், தமிழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்றதும், புதுச்சேரி மாநிலம் நோக்கி வருகின்றனர். காரைக்காலில் நடைபெறவுள்ள பேரணிக்கு தமிழகப் பகுதிகளிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்படுவது குறித்த தகவல் எனக்கும் கிடைத்தது. காவல் துறை இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்கும் மிகப்பெரிய கொள்கை முடிவு யாரை கேட்டு எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. மின் துறை தனியார்மயமாக்கப்படாது என முதல்வர் அறிவித்தால், எல்லாக் கட்சிகளும் அவருக்கு ஆதரவாக இருக்கும்” என்றார்.