இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ளூர் அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது நடந்த கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 180 பேர் படுகாயமடைந்துள்ளனர். கலவரத்தின்போது மைதானத்திலேயே 34 பேர் உயிரிழந்த நிலையில் 2 போலீசார் உட்பட 93 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
வெற்றி பெற்ற அணியின் ரசிகர்களும், தோல்வி அடைந்த அணியின் ரசிகர்களும் மோதிக் கொண்டதால் கலவரம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மாஜி பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரன்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கிழக்கு ஜாவா மாகாணத்தின் காவல்துறைத் தலைவர் நிகோ அஃபின்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், அரேமா எஃப்சி மற்றும் பெர்செபயா சுரபயா இடையேயான போட்டியைத் தொடர்ந்து, தோல்வியடைந்த அணியின் ரசிகர்களுக்கும், வெற்றி பெற்ற அணியின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கலவரம் வெடித்ததாக கூறியுள்ளார். தோல்வியடைந்த அணியின் ரசிகர்கள் ஆடுகளத்தை ஆக்கிரமித்ததால் நெரிசல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கால்பந்து சங்கம் (பிஎஸ்எஸ்ஐ) இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.