திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் குப்பைகள் குவிந்து சுகாதாரம் இல்லாமல் காட்சியளிக்கிறது.
‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2668 அடி உயர திரு ‘அண்ணாமலை’, 14 கி.மீ., தொலைவு கொண்டது. திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சிகளை உள்ளடக்கியது. பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன், கிரிவல பாதையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுகிறது. இதனால், கிரிவல பாதை ஓரிரு நாட்கள் பளபளவென தூய்மையாக காட்சியளிக்கும்.
அதன்பிறகு, தூய்மை பணியை மேற்கொள்வதில் உள்ளாட்சி அமைப்புகள் சுணக்கம் காட்டுகிறது. சாதுக்கள் மற்றும் பவுர்ணமி அல்லாத நாட்களிலும் கிரிவலம் (தினசரி) செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான கழிவுகள் குவிந்துவிடுகிறது. கிரிவல பாதையில் மரக்கன்று நடும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதற்காக கொண்டு வரப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டதும், மரக்கன்றுகளின் அடிபாகத்தை பாதுகாக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களும் வீசப்பட்டுள்ளது. மேலும், கிரிவல பாதையில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளும், வீசப்படுகிறது.
குப்பைகள் அதிகளவில் சேர்ந்துள்ளதால், கிரிவல பாதையில் தொண்டு நிறுவனம் மூலம் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளும் நிரம்பி வழிகிறது. மேலும், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கும் அவலமும் தொடர்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளும் எரிக்கப்படுவதால், அதிலிருந்து வெளியேறும் நச்சுகள், காற்றில் கலந்து, இயற்கையை சீர்குலைக்கிறது. தூய்மையாக வைக்கப்பட வேண்டி கிரிவல பாதை, குப்பைகள் நிறைந்து காட்சியளிக்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கிரிவல செல்லும் பக்தர்களுக்கு சுவாச பிரச்சினையும் ஏற்படுத்திவிடுகிறது.
எனவே, கிரிவல பாதையில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி, அனைத்து நாட்களிலும் தூய்மை வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிரிவல பாதை தூய்மையாக இருப்பதை ஆட்சியர் பா.முருகேஷும் அடிக்கடி உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.