10 ஆண்டுகளுக்கு முன்பு படித்தளவிற்கு தற்போது புத்தகங்கள் படிக்க முடியவில்லை என்றும் நினைவாற்றல் குறைந்ததால் தனது படம் வெளிவந்த ஆண்டைகூட இணையத்தில் பார்த்தே தெரிந்து கொள்கிறேன் எனவும் குழந்தைகளுக்கான நூல் நிலையத் திறப்பு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
பாரதி புத்தகாலயம் சார்பில் சிறுவர்களுக்கான புத்தகங்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘அரும்பு ‘ புத்தக விற்பனையகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னாள் ஆளுநரும் காந்தியடிகள் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
புத்தக அரங்கை திறந்து வைத்தப் பிறகு நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், அலைபேசி பயன்பாடு அதிகரித்ததால் புத்தக வாசிப்பு குறைந்து, நினைவாற்றலும் குறைந்து வருவதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்தளவு தற்போது தன்னால் புத்தகங்களை படிக்க முடியவில்லை என்றும் கூறினார். மேலும் குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு அதிகரிக்க பெரியவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் வெற்றிமாறன் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் “வாழ்வில் வாசிப்பு என்பது இன்றியமையாத குணம், டிஜிட்டல்மயனான பிறகு அறிவுக்காக புத்தகத்தை சர்ந்திருப்பது குறைந்துவிட்டது. நாம் புத்தகங்கள் மூலம் மட்டும் வாசித்தபோது குறைவாக படித்தாலும், ஆழமாக தெரிந்து கொண்டோம். ஆனால் இன்று கூகுள் டாக்டர், கூகுள் வரலாற்றாளராக அனைவரும் மாறிவிட்டோம்.
இன்று நமக்கெல்லாம் நினைவாற்றல் குறைந்து விட்டது. என்னுடைய படம் வெளிவந்த ஆண்டு குறித்து கூட எனக்கு நினைவு இல்லாமல் போய்விட்டது. இணையத்தில் சென்று பார்த்துதான் தெரிந்து கொள்ளும் சூழல் இருக்கிறது. வாசிப்புத் தன்மை குறைவதால் அறிவு குறைந்து விடுகிறது. 10 ஆண்டு முன்பு படித்த அளவு இப்போது படிக்க முடியவில்லை. எனது மகனுக்கு 7 வயது, அவன் சாப்பிடும்போது தவறாமல் அலைபேசியில் கேம், படம் பார்க்கிறான். அலைபேசி பயன்படுத்துவதை நம்மிடமிருந்துதான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.
குழந்தைகளிடம் வாசிப்பதற்கான பொறுமை இன்று இல்லை. எனவே டிஜிட்டல் முறையில் புத்தகங்களை கொண்டு சேர்க்க வேண்டும். குழந்தைகளின் அறையில் அமர்ந்து பெரியவர்கள் புத்தகம் படிக்க வேண்டும். குழந்தைகள் புத்தகம் வாசிக்க பெரியவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். வீட்டில் நுழையும்போது செருப்பை கழற்றிவிடுவது போல், ஏதோவொரு இடத்தில் அலைபேசியை வைத்து விட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன், “உலகத்தை கற்றுத் தருவதற்கு வாசிப்பு முக்கியம். அனைவரும் வாசிக்க வேண்டும். நம் காலத்தில் புத்தக வாசிப்பு எளிதாக இருந்தது. ஆனால் இன்று அனைத்தும் டிஜிட்டல் ஆனதால், அலைபேசி மூலமே அனைத்தையும் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். அனைத்தையும் கூகுள், விக்கிபீடியாவிலேயே தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறோம்.
குழந்தைகளுக்கான படங்கள் அதிகம் வராததற்கு காரணம், குழந்தைகளுக்கான படம் எடுப்பதற்கான இயக்குநர்கள் இல்லை என்பதுதான். குழந்தைகள் படம் எடுக்க அதற்குரிய பக்குவமும், முதிர்ச்சியும் வேண்டும். குழந்தைகளுக்கு படம் எடுத்தால் அதில் சரியானதை , சரியான முறையில் கொடுக்க வேண்டும். விமர்சனம் செய்வது என்பது அவரவருக்கான சுதந்திரம். திரைப்படங்கள் குறித்து விமர்சிக்க, திரைப்பட விமர்சகர்களுக்கு சுதந்திரம் உண்டு.
இலக்கியத்தில் இருந்து சினிமா எடுப்பது எல்லா காலங்களிலும் நடந்துள்ளது. இலக்கியம் சினிமாவாக வருவதன் மூலம் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் படமாக வந்தால் மட்டுமே எழுத்தாளர்களுக்கு கௌரவம் கிடைக்கும் என்று கிடையாது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை” இவ்வாறு அவர் கூறினார்.