கொலு வைக்கப்பட்ட அம்மன் சிலையை சுற்றிய பாம்பு! வைரலாகும் வீடியோ!

நவராத்திரி தொடங்கிவிட்டதால் அனைத்து கோவில்களிலும் சாமி சிலைகள் போன்ற பல்வேறு சிலைகளை வைத்து கொலு வைப்பார்கள்.  ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு விதமான அலங்காரங்கள், நெய்வேத்தியம், பூஜை என கோலாகலமாக 9 நாட்கள் நடைபெறும்.  சிலர் வீடுகளிலும் கொலு வைப்பார்கள், இதற்கென விரதமிருந்து, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகள் அமைத்து அதில் கண்கவர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.  இதில் புராண கதைகளை கூறும் விதமான பொம்மைகள், திருக்கல்யாணம், வாணிபம், போக்குவரத்து, நாகரீகம், விலங்குலகம், பறவைகள், திருமண நிகழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமான வண்ண வண்ண பொம்மைகளை அடுக்கி வைத்திருப்பார்கள்.  இந்த கண்கவர் கொலு பொம்மைகளை ஏரளமான பக்தர்கள் காண செல்வார்கள்.  தற்போது ஒரு கோவிலில் வைக்கப்பட்டுள்ள கொலு நிகழ்ச்சியில் ஆச்சர்யமான சம்பவம் ஒன்று நடைபெற்று இருக்கிறது.  

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சிவன் கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு இருந்தது, அங்கு வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையின் தலையில் பாம்பு ஒன்று கிரீடம் சுற்றி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் அதனை பார்த்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.  அம்மன் தலையில் பாம்பு சுற்றியிருப்பது சிலருக்கு ஆச்சர்யமாகவும், சிலருக்கு அதிர்ச்சியாகவும் இருக்கிறது.  பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலரும் அருகில் சென்று தங்களது மொபைல்களில் அந்த பாம்பை படம்பிடித்து வந்தனர்.  பின்னர் உடனடியாக அம்மன் சிலை தலையில் சுற்றியுள்ள பாம்பை பிடிப்பதற்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருமயம் தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக கோயிலுக்கு சென்று அந்தப் பாம்பை பிடித்தனர்.  பின்னர் அந்த பாம்பு சிறிய ரக மலைப்பாம்பு என்று தீயணைப்புத் துறையினர் இனம் கண்டு தெரிவித்ததோடு, அப்பாம்பை பத்திரமாக மீட்டு அருகிலுள்ள காட்டில் கொண்டு சென்று விட்டனர்.  அம்மன் சிலையின் தலையில் சிறிய மலைப்பாம்பு சுற்றியிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.