அகில இந்திய
காங்கிரஸ்
கட்சியின் அடுத்த தலைவர் யார்? காந்தி குடும்பத்தை அல்லாமல் அலங்கரிக்கப் போகும் அந்த நபர் யார்? என்ற கேள்விக்கு கிட்டதட்ட விடை தெரிந்துவிட்டதாகவே அக்கட்சி தொண்டர்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு போட்டிக்கான களம் சுருங்கி விட்டது. காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரி தெரிவித்துள்ள தகவலின்படி, மல்லிகார்ஜுன கார்கே 14 படிவங்களும், சசி தரூர் 5 படிவங்களும், கே.என்.திரிபாதி ஒரேவொரு படிவமும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் இறுதி பட்டியல் நாளை மாலை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் கார்கேவிற்கே சோனியா குடும்பத்தின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த குடும்பத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். தங்கள் கட்டிப்பாட்டில் இருந்து கட்சி சென்று விடாமல் சோனியா குடும்பத்தினர் பார்த்துக் கொள்ள கார்கேவையே தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயத்தில் மன்மோகன் சிங் எப்படி பொம்மை பிரதமர் என்று பாஜக விமர்சித்ததோ, அதேபோன்றதொரு நிலை காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சசிதரூரின் போட்டி வெறும் சம்பிரதாய நிகழ்வாகவே அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சசிதரூர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். எனவே தனது சொந்த மாநிலத்தில் செல்வாக்கை பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. கேரள மாநில எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வி.டி.சதீசன் தனது ஆதரவை மல்லிகார்ஜுன கார்கேவிற்கு அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கட்சியின் மூத்த தலைவர் கார்கே. நல்ல அனுபவம் இருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பல்வேறு அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர்.
எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். தலித் தலைவர். காங்கிரஸ் கட்சிக்கு தலித் தலைவர் ஒருவர் தலைமை பொறுப்பிற்கு வருவது மிகவும் மகிழ்ச்சியானது. அவருக்கு தான் எனது முழு ஆதரவு. கார்கேவிற்காக நான் பிரச்சாரம் செய்யவுள்ளேன் என்று தெரிவித்தார். சசிதரூர் பற்றி எழுப்பிய கேள்விக்கு, இந்த நேரத்தில் மாநில அளவிலான பிரச்சினைகளையோ, சின்ன சின்ன சச்சரவுகள் பற்றியும் பேச விரும்பவில்லை.
வரப் போவது தேசியத் தலைவருக்கான தேர்தல். காங்கிரஸ் கட்சியானது ஒரு ஜனநாயகக் கட்சி. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இதுதான் எங்கள் கட்சியின் அழகு. கேரளாவில் இருந்து அதிகப்படியான வாக்குகள் கார்கேவிற்கு கிடைப்பதற்காக உழைப்போம் என்று கூறி மழுப்பி விட்டது கவனிக்கத்தக்கது. இதன்மூலம் சசிதரூருக்கு கேரளாவில் கூட பெரிதாக ஆதரவு இல்லை என்று தெரியவந்துள்ளது.