சுற்றுலா பயணியருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் அரண்மனை

மைசூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணியருக்கு, அம்பாவிலாஸ் அரண்மனை உட்பட, நகரில் உள்ள பல அரண்மனைகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். மைசூரு சமஸ்தானத்தின் மூன்று ராஜகுமாரிகளின் அரண்மனைகள் உள்ளன.கர்நாடகாவின், மைசூரு நகர், உலக அளவில் பிரசித்தி பெற்றது என்பதில், மாற்றுக்கருத்தே இல்லை. இங்கு இருப்பதை போன்று அரண்மனைகளை, வேறு எங்கும் காண முடியாது.

இதற்காகவே மைசூரு ‘அரண்மனை நகர்’ என அழைக்கப்படுகிறது. இங்குள்ள மூன்று அரண்மனைகளை பற்றி, கூறியே ஆக வேண்டும். இவைகள் ராஜகுமாரிகளுக்காகவே கட்டப்பட்டவை.நால்வடி கிருஷ்ணராஜ உடையார், தன் மூன்று சகோதரியருக்காக, தனித்தனியாக அரண்மனைகள் கட்டினார். ஜெயலட்சுமம்மணிக்காக, ‘ஜெயலட்சுமி விலாஸ்’ அரண்மனை; கிருஷ்ண ராஜம்மணிக்காக, ‘காரஞ்சி விலாஸ்’ அரண்மனை, செலுவ ராஜம்மணிக்காக, ‘செலுவாம்பா விலாஸ்’ அரண்மனை கட்டப்பட்டது.

ஜெயலட்சுமி விலாஸ்

‘ஜெயலட்சுமி விலாஸ்’ அரண்மனை, இன்றைய மைசூரு மானச கங்கோத்ரி வளாகத்தில் உள்ளது. சாமராஜ உடையாரின் மூத்த மகளும், கிருஷ்ணராஜ உடையாரின் சகோதரியுமான ராஜகுமாரி ஜெயலட்சுமம்மணிக்காக, 1901ல் கட்டப்பட்டது. இதற்காக ஏழு லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இது முதலாவது ராஜகுமாரியின் அரண்மனை என்றே அழைக்கப்பட்டது. குக்கரஹள்ளி ஏரி அருகில் கட்டப்பட்டதால், கெப்பேகட்டே பங்களா என்றும் சிலர் அழைக்கின்றனர்.மைசூரு சமஸ்தானத்தின், தலைமை பொறியாளர் ராகவலு நாயுடு ஆலோசனைப்படி கட்டப்பட்ட இந்த அரண்மனை, வடக்கு மற்றும் கிழக்கு முகமாக நுழைவாசல்கள் உள்ளன. நான்கு பாகங்கள் கொண்ட அரண்மனை, ஒன்றாக சேர்ந்து ஒரே கட்டடம் போன்று தென்படுகிறது. ஹிந்து,- இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. பெரிய மர கதவுகள், அரண்மனைக்கு மெருகூட்டுகின்றன.அரண்மனை கீழ் தளத்தில், நுழைவு வாசல், பிரம்மாண்ட வரவேற்பறை, விசாலமான ஹால்கள், 123 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இவற்றில் 90 அறைகள் ராஜகுமாரிகள் வசிப்பதற்காக ஒதுக்கப்பட்டன. மற்றவை பணியாட்களுக்கு அளிக்கப்பட்டன. விருந்தினர்களுக்காகவே, சிறப்பான அலங்காரத்தில் அறைகள் கட்டப்பட்டுள்ளன. தரைக்கு மொசைக் பொருத்தப்பட்டுள்ளன.இது மட்டுமின்றி நாட்டிய அரங்கம், திருமண மண்டபம் உள்ளன. நாட்டிய அரங்கத்தின் தரைப்பகுதி தேக்கு மர பலகையால் அமைக்கப்பட்டுள்ளது. பலகைக்கு எந்த ஆணியும் பயன்படுத்தாமல் பொருத்தப்பட்டுள்ளது. 40 அடி உயரமான மேற்கூரை, வண்ண மயமான கண்ணாடிகளால், அலங்கரிக்கப்பட்டுள்ளன. அரண்மனை உட்புற அலங்காரத்தை பார்க்க, இரு கண்கள் போதாது.அரண்மனையில், ஜில்லா அதிகாரியாக இருந்த நரசராஜ உடையாருக்கும், ஜெயலட்சுமம்மணிக்கும் திருமணம் நடந்தது. இந்த அரண்மனை மற்றும் 300 ஏக்கர் இடத்தையும், 1959ல் தேசிய கவிஞர் குவெம்பு, மைசூரு பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த போது, பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பத்து லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது அரண்மனை அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், இன்போசிஸ் அறக்கட்டளை தலைவி சுதா மூர்த்தி வழங்கிய 1.17 கோடி ரூபாய் நிதியுதவியில், இந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டது.

‘காரஞ்சி விலாஸ்’

‘காரஞ்சி விலாஸ்’ அரண்மனை, நஜர்பாத்தின் காரஞ்சிகெரேவின், அழகான சுற்றுச்சூழலில் கட்டப்பட்டுள்ளது. அழகான இந்த அரண்மனை, நால்வடி கிருஷ்ணராஜ உடையார், தன் இரண்டாவது சகோதரி கிருஷ்ணராஜம்மணிக்காக, 1902ல் கட்டியதாக கூறப்படுகிறது. இதை கட்ட நான்கு லட்சத்து 27 ஆயிரத்து 610 ரூபாய் செலவானதாம். ஹிந்து, கிரேக்க பாணியில் கட்டப்பட்ட அரண்மனைக்கு, ராஜஸ்தானி பாணியில் ஜன்னல்கள், தாமரைப்பூ மீது வடிவமைக்கப்பட்டுள்ளது. காரஞ்சி ஏரி அருகில் கட்டப்பட்டுள்ளதால், ‘காரஞ்சி விலாஸ்’ என அழைக்கின்றனர்.

செலுவாம்பா விலாஸ்

மூன்றாவது அரண்மனையான, ‘செலுவாம்பா விலாஸ்’ அரண்மனை, கிருஷ்ணராஜ உடையார், தன் மூன்றாவது சகோதரியான ராஜகுமாரி செலுவ ராஜம்மணிக்காக, 1911ல் கட்டினார். இந்த அரண்மனை, நகரின் ரயில்வே நிலையம் அருகில், மேற்கு முகமாக உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது.ஹிந்து — சார்சானிக் பாணியில், கட்டப்பட்ட அரண்மனை, 1950ல் அரசுக்கு மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. தற்போது அரண்மனை, மத்திய அரசு சார்ந்த ஆய்வக அலுவலகமாக பயன்படுத்தப்படுகிறது.மூன்று ராஜகுமாரிகளின் அரண்மனைகள், நால்வடி கிருஷ்ணராஜ உடையார், தன் சகோதரியர் மீது வைத்திருந்த அன்பை விவரிக்கிறது. தற்போது மூன்று அரண்மனைகள், வெவ்வேறு நோக்கங்களுக்கு பயன்பட்டாலும், மைசூரு மஹாராஜாக்களின் வரலாற்றுக்கு சாட்சியாக அமைந்துள்ளது.

– நமது நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.