புதுடெல்லி: டெல்லியில் வருகின்ற 25ம் தேதி முதல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருந்தால் தான் வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 29ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்து குறித்தும் விவாதிக்கப்பட்டது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுக்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் முக்கிய காரணமாகும். இதனை கட்டுப்படுத்துவது அவசியமாகும். எனவே வருகின்ற 25ம் தேதி முதல் பெட்ரோல் பங்க்களில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இருந்தால் மட்டுமே எரிபொருள் வழங்க முடியும். அவ்வாறு சான்றிதழ் இல்லையென்றால் வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது. வருகிற 6ம் தேதி முதல் டெல்லியில் தூசிக்கு எதிரான பிரசாரமும் தொடங்கப்படும். தூசியினால் ஏற்படும் மாசு குறித்து சோதனை செய்யும் வகையில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும்’’ என்றார்.