கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறவழிச்சாலைக்குச் செல்லும் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள் உடைந்து கிடந்தன. அதனால் மதுபோதையில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் கருதினர். இந்த நிலையில், இறந்தவரின் உடலிலும் கைகளிலும் சூர்யா, பேட் பாய், பிரதீப் என்ற பெயர்கள்ஆங்கிலத்தில் பச்சைக் குத்தப்பட்டிருந்தன. அதை வைத்து கேளம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலைசெய்யப்பட்டவர், கேளம்பாக்கத்தை அடுத்த படூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த் (22) எனத் தெரியவந்தது. அதனால் லட்சுமி காந்த் குறித்து விசாரித்தபோது அவரின் நண்பர் பெயர்தான் பிரதீப் எனத் தெரிந்தது. இதையடுத்து பிரதீப்பிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். அதனால் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் லட்சுமிகாந்த்துடன் பிரதீப் பைக்கில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதனடிப்படையில் விசாரித்தபோது லட்சுமிகாந்த்தை பிரதீப் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டான். பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரையும் பிரதீப்பின் நண்பன் சதீஷ் கண்ணன் ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில் “கொலைசெய்யப்பட்ட லட்சுமிகாந்த்தும் கைதான பிரதீப்பும், சதீஷ்கண்ணனும் நண்பர்கள். இவர்கள் மூன்று பேரும் சில தினங்களுக்கு முன்பு மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் பிரதீப்பின் காதலியை லட்சுமிகாந்த் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப், நண்பன் என்றுகூட பாராமல் லட்சுமிகாந்த்தை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அதை சதீஷ்கண்ணன் தடுத்துள்ளார். இதையடுத்து லட்சுமிகாந்தின் தலையில் கல்லை போட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.
லட்சுமிகாந்த் உடலில் பிரதீப் என பெயர் பச்சைக் குத்தப்பட்டதை அடிப்படையாக வைத்து அவரின் நண்பனான பிரதீப்பிடம் விசாரணை நடத்தினோம். பின்னர் பிரதீப் அளித்த தகவலின்படி அவரின் நண்பன் சதீஷ்கண்ணனை கைதுசெய்துள்ளோம். இவர்கள் அனைவரும் கஞ்சா, மது போதைக்கு அடிமையானவர்கள். கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளனர்” என்றனர்.
கொலையாளிகளை ஆறு மணி நேரத்திலேயே அடையாளம் கண்டு கைது செய்த கேளம்பாக்கம் போலீஸாரை கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.