பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரண்டாவது நாளாக நேற்று பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றார். இதற்கு முன்னதாக கர்நாடகாவில் ராகுல் காந்தி, யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பாகவே, மாநிலத்தில் வைக்கப்பட்டிருந்த ராகுல் காந்தி பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பா.ஜ.க நேற்று, உள்ளூர் செய்தித்தாள்களில் நேரு, ராகுல் காந்தி படங்களுடன் காங்கிரஸை விமர்சித்து விளம்பரம் செய்திருந்தது.
அந்த விளம்பரத்தில் நேரு, ராகுல் காந்தி படங்களுக்கு நடுவே, பாகிஸ்தான், வங்காளதேசத்தைப் பிரிக்கும் வரைபடத்துடன், “நேரு, கிராண்ட் ஃபாதர் ஆஃப் இந்தியன் பார்ட்டிஷன், அவரின் கொள்ளுப்பேரனால்(ராகுல் காந்தி) இந்தியாவை ஒற்றுமைப்படுத்த முடியுமா?” என்று கேள்வியெழுப்பட்டிருந்தது. மேலும், பாரத் ஜோடோ யாத்ராவின் அஜெண்டா இந்தியாவைச் சிதைப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியது. இந்த நிலையில் பா.ஜ.க-வின் இத்தகையச் செயலுக்குக் காங்கிரஸ் தன்னுடைய பதில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத் தலைவர் பவன் கேரா, “வலதுசாரி சித்தாந்தம் எப்போதும் வரலாற்றின் தவறான பக்கத்தில்தான் உள்ளது. அவர்களுக்கு(பா.ஜ.க) 1947 மற்றும் 1971-க்கு முந்தைய வரலாறு தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு அவர்களின் சொந்த வரலாறே தெரியாது. மேலும், அவர்களால் வரலாற்றை எழுத முடியாததால், வரலாற்றை அவர்கள் மீண்டும் எழுத முயற்சிக்கிறார்கள்” எனச் செய்தியாளர்களிடம் கூறினார்.