பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – மீண்டும் தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ,குன்றத்தூர் ஆகிய 5 ஒன்றியங்களிலுள்ள கிராமங்களில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது.

இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரத்தில் அக் கிராம மக்கள் தினந்தோறும் இரவில் கடந்த 67நாட்களாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் இன்று ஏகனாபுரத்தில், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கோபிநாத், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெகநாதன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி அக் கிராம மக்கள் ஏக மனதாக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த சதந்திர தினத்தன்று ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபையில் இந்த பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் இரண்டாவது முறையாக இன்று நடைபெற்ற கிராம சபையில் மீண்டும் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், இதேபோல் ஏகனாபுரம் மட்டுமல்லாமல் மேலேறி, நெல்வாய், வளத்தூர், பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமத்திலும் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் புதிதாக அமைய இருக்கும் இந்த பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து விவசாய நிலங்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி இத்திட்டதை கைவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.