புதுடெல்லி: மேகாலயா மாநில ஆளுநராக இருந்து வருபவர் சத்யபால் மாலிக், இவர் முன்னதாக ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்துள்ளார். ஆளுநரான சத்யபால் மாலிக், ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினார். அதே போல் அக்கினி வீரர்கள் திட்டம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை விமர்சித்தது சர்ச்சையானது. இந்நிலையில், ஆளுனராக இருந்து கொண்டு பாஜ அரசை விமர்சனம் செய்து வந்த சத்யபால் நாளை ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து, அருணாச்சல பிரதேச ஆளுனர் பி.டி.மிஸ்ராவுக்கு மேகாலயா ஆளுனர் பொறுப்பு வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஜனாதிபதியின் செயலாளர் அஜய்குமார் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அருணாச்சல பிரதேச ஆளுனர் பி.டி.மிஸ்ராவுக்கு மேகாலயா ஆளுனர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆளுனர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பில் இருப்பார் என கூறப்பட்டுள்ளது.