புதுச்சேரி: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அக்.2 காந்தி ஜெயந்தி தினமான இன்று பேரணிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அணிவகுப்பு பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று (அக்.2) இந்தப் பேரணியை நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, ஆர்எஸ்எஸ் பேரணி புதுச்சேரி பாலாஜி திரையரங்கம் அருகில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. பேரணி காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்ஸி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக கடலூர் சாலையை அடைந்து அங்குள்ள சிங்காரவேலர் சிலை அருகே மாலை 5.30 மணி வரை நிறைவடைகிறது.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் பிரச்சினை ஏதும் இல்லாத காரணத்தால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.
மனித சங்கிலி
இதனிடையே புதுச்சேரியில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் இன்று மனித சங்கிலி அணிவகுப்பு நடைபெறுகிறது.