புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கும், ராஜா திரையரங்கம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கும், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர், இதனைத் தொடர்ந்து சர்வ மாத பிரார்த்தனையும், தேசபக்தி பாடல்களும் இசைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “மின்துறை ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.
அத்துமீறி துணை மின் நிலையங்களில் நுழைந்து மின்சாரத்தை துண்டித்து விஷமத்தனமான செயல்களில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனை அரசு வேடிக்கை பார்க்காது… பொதுமக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு மின் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள்மீது எஸ்மா சட்டம் பாயும்.
நேற்று ஏற்பட்ட மின் தடையில் மருத்துவமனையில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைக்கிறேன், மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்” என்றார்.