காரைக்குடி: காரைக்குடி கல்லூரி சாலையில் மாணவிகளின் முன்பு வாகனத்தில் சாகசம் காட்டிய பாலிடெக்னிக் மாணவர் திடீர் என தலைகுப்புற விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம் உட்பட பல கல்வி நிலையங்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தில் ‘ரோமியோ’ மாணவர்கள், இளைஞர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் 2 கிமீ தூரத்திற்கு மேல் உள்ள இந்த கல்லூரி சாலையில் மாணவர்கள், இளைஞர்கள் டூவீலர் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்வது வாடிக்கையாகி வருகிறது. நேற்று முன்தினம் அழகப்பாபுரம் காவல் நிலையம் எதிரே, அரசு கலைக்கல்லூரி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்த மாணவிகளை கவர, டூவீலரில் வந்த இளைஞர்கள் சாகசம் செய்தனர்.
இதனை பின்னால் வந்த மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது டூவீலரின் பின்புறம் அமர்ந்திருந்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் திடீரென எழுந்து சீட்டில் ஏறி நின்றார். அப்போது திடீரென டூவீலர் வேகமாக செல்லவும் அப்படியே தலைகுப்புற விழுந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.