இடையில் ஓய்வுபெற்ற முதியோர் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தில் நிம்மதியாக வாழ முடியுமா?
ஒரு பக்கம் விலைவாசி உயர்வு… மறுபக்கம் சேமித்த பணத்தின் வட்டி விகிதம் குறைவு – இந்த இரண்டுக்கும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மனிதன், இன்று வாழ்க்கை வசதிகள் அதிகரித்திருக்கும்போதும் ஆரோக்கியமாக வாழ்கின்றனா?
இன்றைய சூழ்நிலையில் முதியோரை குறிவைத்து நடத்தப்படும் குற்றங்கள் அநேகம்… இதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?
இப்படி பண பலம், உடல்நலம், வாழ்க்கை சூழல் என்கிற மூன்று முக்கியமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்விதமாக அமைந்தது, அவள் விகடன் – அதுல்யா சீனியர் கேர் இணைந்து நடத்திய ஹலோ சீனியர்ஸ் நிகழ்ச்சி. அக்டோபர் 1-ம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், முதுமைக்கு மரியாதை தரும் வகையில் ஆனந்த விகடன் அலுவலகத்தில் இன்று அக்டோபர் 2-ம் தேதி காலையில் நடந்த நிகழ்ச்சியின் அஸோசியேட் ஸ்பான்சர்ஸ் தில்லை’ஸ் மசாலா மற்றும் பீ மார்க்கெட்.
`உங்கள் பாதுகாப்பு… உங்கள் நலம்… உங்கள் பணம்… ஆலோசிக்கலாம்… அலர்ட் ஆகலாம்’ என்று அனைவரையும் அழைத்திருந்த இந்த நிகழ்ச்சியில், முதியோரும் முதலீடும் பற்றி பேசிய முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, “போன வருஷம் நூறு ரூபாய்க்கு வாங்கிய பொருளை இன்றைக்கு நூற்று பன்னிரண்டு ரூபாய்க்கு வாங்குகிறோம். ஆனால், வங்கியில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்துக்கான வட்டி நூறு ரூபாய்க்கு ஓராண்டுக்குப் பிறகு நூறு ஆறு ரூபாய்தான் கிடைக்கிறது. தேவைப்படும் இந்த ஆறு ரூபாய்க்கு என்ன செய்வது? ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் பணத்தில் இருந்து எடுப்போம். இப்படி எடுத்துக் கொண்டே இருந்தால் சேமிப்பு பணம் மொத்தமும் கரைந்துவிடும்.
ஆக… ஒரு பக்கம் விலைவாசி உயர்வு… மறுபக்கம் சேமித்த பணத்தின் வட்டி விகிதம் குறைவு – இந்த இரண்டுக்கும் இடையில் ஓய்வுபெற்ற முதியோர், தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தில் நிம்மதியாகவும் வாழ அரசாங்கம் பல சலுகைகளை அறிவித்துள்ளன. அவற்றில் அதிக வட்டி தரும் திட்டங்களில், மியூச்சுவல் ஃபண்டுகளில், குறைந்த அளவு ரிஸ்க் உள்ள ஷேர்களில் முதலீடு செய்யலாம்” என்றவர் எப்படி முதலீடு செய்வது, எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்வது என்பது பற்றி விரிவாகப் பேசினார். அவரிடம் சில சந்தேகங்களை எழுப்பிய வந்திருந்த முதியோருக்கு, அதற்கான சரியான தீர்வையும் சொன்னார்.
அடுத்து, ‘ஹெல்த் இஸ் வெல்த்’ என்பது குறித்து சிறப்புரையாற்றிய பொது மருத்துவர் மு.அருணாசலம், “இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மனிதன், இன்று வாழ்க்கை வசதிகள் அதிகரித்திருக்கும்போதும் ஆரோக்கியமாக வாழ்வது குறைந்துவிட்டது. அதிக நாள்கள் வாழ்ந்தாலும் நிம்மதியாக வாழ்வதும் குறைந்துவிட்டது. ஒரு மிருகம் தனக்கு தேவையானவற்றை மட்டுமே பகல் உணவாக எடுத்துக்கொண்டு, இரவு நேரத்தில் நிம்மதியாக உறங்குகிறது. ஆனால், மனிதன் தேவையற்ற உணவை, குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் தூக்கத்தைத் தொலைக்கிறான். ஆரோக்கியமான உணவு, தேவையான உடற்பயிற்சி, நிம்மதியான உறக்கம்… இந்த மூன்றையும் சரியான நேரத்தில் சரியான முறையில் எடுத்துக் கொள்வது நம்மிடம்தான் உள்ளது” என்றவர் உடல் இயக்கத்தைப் பற்றி விவரித்து அதற்கு தகுந்தாற்போல் செயலாற்றினால் மகிழ்ச்சியாக வாழலாம் என்றார்.
அதற்கடுத்து முதியோர் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றிய சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் (வடக்கு) தா.ச. அன்பு ஐபிஎஸ், எப்படிப்பட்ட குற்றங்கள் எந்தெந்த விதத்தில் நடக்கின்றன என்று விவரித்தவர்,“பேச ஆள் கிடைத்தார்கள் என்று நம்முடைய சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. தம்பதியராக வாழ்பவர்கள், தனியாக வசிப்பவர்கள் அக்கம்பக்கத்தில் நட்புறவை வளர்த்து கொள்வது அவசியம். தனியாக வெளியிடங்களுக்கு போகும்போது முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்வது முக்கியம்.
எல்லாவற்றையும் மீறி குற்றங்கள் நடக்கும்போது காவல்துறை உங்கள் உதவிக்கு வரும் முதல் நபராக விளங்கும். அதற்காக அரசாங்கம் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது” என்றவர் முதியோரை குறிவைத்து நடத்தப்படும் குற்றங்களைத் தடுக்க எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கினார்.
முடிவாக, அவள் விகடனுடன் ஹலோ சீனியர்ஸ் நிகழ்ச்சியை இணைந்து நடத்திய அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் பொது மேலாளர் தர்மேந்திரா,“இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திய அவள் விகடன் இதழுக்கு நன்றி சொல்லும் நேரத்தில், இத்தனை சீனியர் சிட்டிசன்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்தது மகிழ்ச்சியைத் தருகிறது. எங்கள் நிறுவனம் சீனியர் சிட்டிசன்களுக்கு எல்லாவகையிலும் உதவ தயாராக இருக்கிறது” என்றார்.
வந்திருந்த சீனியர்ஸ் அனைவரும் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு உற்சாகத்துடன் விடை பெற்றனர்.