மோசமாகும் சவுக்கு சங்கர் உடல்நிலை: முதல்வர் ஸ்டாலின் தலையிட கோரிக்கை!

ஊடகங்களில், சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சகராக, பத்திரிகையாளராக கருத்துகளைத் தெரிவித்து வந்த சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட சவுக்கு சங்கர், இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியும் அளித்திருந்தார். இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். அதேசமயம், கடந்த 14 ஆண்டுகளாக தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த அவரை, பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை உத்தரவிட்டது.

இதனிடையே, சிறையில் உள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறைத்துறை அதிகாரிகள் இதுவரை அவரை மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லவில்லை எனவும், நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்ணாவிரதம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு அவர் அளித்த கடிதத்தை அவர்கள் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

உண்ணாவிரதம் காரணமாக சவுக்கு சங்கரின் உடல்நிலை மோசமாகியுள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட வேண்டும் எனவும், சிறைக் கைதிகள் உரிமை மைய இயக்குநர் பா.புகழேந்தி தெரிவித்துள்ளார். கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் உயிரை காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வர், கூடுதல் தலைமைச் செயலாளர், சிறைத்துறைத் தலைவர், சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உடனடியாக அனைவரும் மின் அஞ்சல் அனுப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான அரசு உத்தரவை சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு வழங்கியபோது, அதனை பெற்றுக் கொள்ள அவர் மறுத்து விட்டதாகவும், அதனை அவர் கிழித்து போட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனடிப்படையில், அவர் மீது சிறைக்குற்றம் சுமத்தப்பட்டு, பல்வேறு விவகாரங்களில் வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் சவுக்கு சங்கரை சிறையில் வழக்கறிஞர்கள் கூட மனு அளித்து பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால், அது அவருக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள். அதை அவர் என்ன வேண்டுமானலும் செய்யலாம். அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. சிறைக் குற்றத்தில் வராத ஒரு செயலை சிறைக் குற்றமாகக் காட்டி தண்டித்தது முதல் தவறு என்று வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.