மும்பை: மும்பை வஷி பகுதியில் லாரி ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் சென்று கொண்டிருந்தது. அதனை மும்பை வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் வழிமறித்து சோதனையிட்டனர். அதில், இறக்குமதி செய்யப்பட்ட ஆரஞ்சுகளை கொண்ட பெட்டிகள் இருந்தன. ஸ்பெயினின் வலன்சியா நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆரஞ்சு பழங்கள் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், அதில் அதிகாரிகள் சோதனையிட்டதில் ஆரஞ்சு பெட்டிகளுக்குள் 198 கிலோ எடை கொண்ட மெத்தாம்பெட்டமைன் மற்றும் 9 கிலோ எடையுள்ள அதிக தூய்மையான கோகைன் என்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.1,476 கோடி. இதனை தொடர்ந்து, இந்த சரக்கை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த நபரை அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.