'வாவ்…' குப்பையில் கோடியை அள்ளும் இந்தூர் – தூய்மையான நகரம் விருதை வென்றது இப்படிதான்!

மத்திய அரசு ஆண்டுதோறும், சுத்தமான நகரம் குறித்து கணக்கெடுப்பை எடுத்து, அதன் முடிவுகளை வெளியிடும். இந்தாண்டுக்கான கணக்கெடுப்பின் முடிவை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், முதல் மூன்று இடங்களை முறையே இந்தூர் (மத்தியப் பிரதேசம்), சூரத் (குஜராத்), நவி மும்பை (மகாராஷ்டிரா) ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன. முதலிடம் பிடிக்கும் நகரத்திற்கு ஸ்வச் சர்வேக்ஷன் என்ற பெயரில் மத்திய அரசு விருதளிக்கும். இந்தூர் நகரம் இந்த விருதை தொடர்ந்து ஆறாவது முறையாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதில், முதல் இடத்தை பிடித்துள்ள இந்தூர் நகரம், வழக்கமான உலர்ந்த குப்பைகள், ஈரமான குப்பைகள் என்ற வகையில் மட்டுமின்றி மொத்தம் 6 வகைகளாக குப்பைகளை இந்தூர் மாநகராட்சி பிரிக்கிறது என கூறப்பட்டுள்ளது. அதுவும், அந்த 6 வகைகளையும், குப்பைகளை வாங்கும்போது பிரிக்கிறது என்பதுதான் அதன் சிறப்பம்சம். 

மத்தியப் பிரதேசத்தின் வணிக தலைநகரமான கருதப்படும் இந்தூரில், மொத்தம் 35 லட்சம் பேர் வசிக்கின்றனர். அந்த மாநிலத்தின் பெரிய நகரமான இந்தூரில், தினமும் 1200 டன் உலர்ந்த குப்பைகளும், 700 டன் ஈரமான குப்பைகளும் சேகரிக்கப்படுகிறது. ஆனால், நகரத்தின் எந்த மூலையிலுமே நீங்கள் ஒரு குப்பைத்தொட்டியைக் கூட பார்க்க முடியாது. 

இதுகுறித்து, இந்தூர் மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவைச் சேர்ந்த கண்காணிப்பு பொறியாளர் மகேஷ் சர்மா கூறுகையில்,”மொத்தம் 850 வாகனங்கள் மூலம் தினமும் வீடுகள், வணிக நிறுவனங்கள்தோறும் சென்று 8 வகைகளாக குப்பைகளை பிரித்து வாங்குகிறோம். 

அந்த வாகனங்களில், அனைத்து வகை குப்பைகளுக்கும் தனித்தனி பெட்டிகள் இருக்கும். உதாரணத்திற்கு, நாப்கின்களுக்கு என்ற பிரத்யேக பெட்டி ஒன்றே இருக்கும். குப்பைகளை முதலிலேயே இப்படி பிரித்து வாங்குவதால், அதனை இயற்கை எரிவாயுக்காக பயன்படுத்த ஏதுவாக இருக்கிறது” என்றார். 

இந்தூரின் கழிவுகளை அகற்றும் செயல்முறையின் முக்கியமானது இந்த இயற்கை எரிவாயு (Bio-CNG) ஆலைதான். ஈரமான குப்பைகளை இந்த ஆலையில் செயல்முறைப்படுத்தப்படுகிறது. இந்த ஆலை ஆசிய கண்டத்திலேயே பெரிய இயற்கை எரிவாயு ஆலை எனக் கூறப்படுகிறது. இந்தூரில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் 550 மெட்ரிக் டன் குப்பைகளை செயல்முறைப்படுத்தும் திறன்கொண்ட இந்த ஆலையை இந்தாண்டு பிப்.15ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 

இந்த ஆலை மூலம், 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் கிலோ, இயற்கை எரிவாயுக்கள், 10 டன் இயற்கை உரத்தையும் தயாரிக்க முடியும் ன கூறப்பட்டுள்ளது. இங்கு தயாராகும் இயற்கை எரிவாயு நகரத்தில் இருக்கும் 150க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு எரிபொருளாக இருக்கிறது. இந்த எரிவாயு, பேருந்துகளுக்கு உபயோகிக்கப்படும் எரிவாயுக்களை விட 5 ரூபாய் குறைவு என தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிதியாண்டில் மட்டும், கழிவுகளை அகற்றுவதால் மொத்தம் 20 கோடி ரூபாய்க்கு வருமானத்தை மாநகராட்சி ஈட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 8 ஆயிரத்து 500 தூய்மை பணியாளர்கள் மூன்று ஷிப்ட்களில் பணிபுரிந்து இந்தூரை தூய்மையாக வைத்திருப்பதாகலவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.