விருதுநகர்: மரம் திரும்பிய பறவைகள் என்ற தலைப்பில் விருதுநகர் அருகே நடையனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
விருதுநகர் அருகே உள்ள நடையனேரி அரசுப்பள்ளியில் 1992 முதல்-99ம் ஆண்டு வரை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புபடித்த மற்றும் இடைநிற்றல் மாணவர்கள் சந்தித்த இனிமையான நிகழ்வு அதே ஊரில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், பெங்களூருவில் பணியாற்றி வரும் ஐஆர்எஸ் அதிகாரி வருமான வரித்துறை இணை ஆணையர் சங்கர் கணேஷ், கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் வீரலட்சுமி, காஷ்மீர், அசாம் பகுதிகளில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் குடும்பத்தினருடன் சந்தித்துக் கொண்டனர்.
25 ஆண்டுகள் கடந்து தங்கள் பள்ளி நண்பர்கள் ஒருவரையொருவர் சந்தித்த நிகழ்வு அவர்களுக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பழைய நண்பர்களை 25 ஆண்டுகள் கடந்து சந்திக்கையில் ஒருவரை ஒருவர் கட்டி ஆரத்தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தியதோடு தங்கள் குடும்பத்தினரை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தங்கள் வாழ்வின் ஒளி விளக்காக திகழ்ந்த ஆசிரியப் பெருமக்களையும் அழைத்து அவர்களை கவுரவப்படுத்தினர். மேலும் தமக்கு கற்ப்பித்த, உடன் பயின்று இயற்கை எய்திய நண்பர்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கல்வி மற்றும் தனித்திறனில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பு செய்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருமான வரித்துறை இணை இயக்குநரும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான சங்கர் கணேஷ்,பேசுகையில் அரசுப்பள்ளி மாணவர்களும் சாதனை படைக்க முடியும் என்றும் கல்விக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது என்றும் அதை நாம் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் கூறினார். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவரும் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.