இந்தியாவில் ஐ.டி., மற்றும் வர்த்தக நிர்வாகத்துறையின் வீழ்ச்சி மிகப்பெரிய விகிதத்தை எட்டுவதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் இந்திய ஐ.டி., ஊழியர்கள் சுமார் 22 லட்சம் பேர் தங்களது வேலையை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக டீம்லீஸ் டிஜிட்டலின் ‘டேலண்ட் எக்ஸோடஸ் ரிப்போர்ட்’ எனும் அறிக்கை கூறுகிறது. அத்துடன், 57 சதவீத ஐ.டி., ஊழியர்கள் எதிர்காலத்தில் மீண்டும் அத்துறைக்கு திரும்புவதைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
2022 நிதியாண்டை ஒப்பிடும்போது, 2023ஆம் நிதியாண்டில் ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கை கணித்துள்ளது. 2022 நிதியாண்டின் 49 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2023 நிதியாண்டிற்கான ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கையில் 55 சதவீதம் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு செயல்திறனை மேம்படுத்துவதுடன், வேலை திருப்தியை அதிகரிக்கும் என்ற தவறான கருத்து நிலவுவதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் முதல் 22 லட்சம் பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேறுவார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
“இந்திய ஐ.டி., துறை கடந்த பத்தாண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. சுமார் 15.5 சதவீத வளர்ச்சியை இந்திய ஐ.டி., துறை பதிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 227 பில்லியன் டாலர் வர்த்தகத்தை தொட்ட வேகமான வளர்ச்சி இது. அதன் காரணமாக 2022 நிதியாண்டில் கூடுதலாக 5.5 லட்சம் வேலைகள் உருவாகின.” என என்று டீம்லீஸ் டிஜிட்டலின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் செம்மன்கோடில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உலகளாவிய கொரோனா தொற்று, ஐ.டி., வேலைவாய்ப்பை சீர்குலைத்துள்ளது. இந்த தலைகீழ் போக்குக்கான சான்றுகள் உள்ளன. பணியாளர்களை தக்க வைத்து கொள்வதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாற்றம் கண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகளுக்கான வழக்கமான கோரிக்கையுடன், புதிய வேலைகள் மீதான ஈர்ப்பு, நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் வெளிப்புற காரணிகளில் பிரதிபலிக்கும் என்பதால் இதனை முதலாளிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேலை மற்றும் வாழ்க்கை பற்றிய உணர்வுகள் ஊழியர்களிடையே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. எனவே, நிறுவனங்கள் அதுபற்றி பரிசீலிக்க வேண்டும்.” எனவும் சுனில் செம்மன்கோடில் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள், நெகிழ்வுத்தன்மை, தொழில் வளர்ச்சி மற்றும் பணியாளர் மதிப்பு முன்மொழிவு போன்ற மாறுபாடுகள் ஏற்பட்டாலும், இந்த அம்சங்களின் அடிப்படையில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மறுமதிப்பீடு செய்கிறார்கள். இதனால், தங்களது வேலைகளை பாதியிலேயே அவர்கள் விட்டுவிடுகிறார்கள். எனவே, பணியிடங்களில் நெகிழ்வுத்தன்மை தேவை என்பதை ஆபத்தான இந்த புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
நிறுவனங்களின் பணியமர்த்தல் திட்டங்களில் அவர்களின் பணியாளர்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான இலக்குகள் இருக்க வேண்டும். ஒரு ஊழியர் தனது வேலையில் மதிப்புள்ளதாக உணர்கிறாரா அல்லது மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் விளைவுகளையும் மதிப்பையும் உருவாக்குகிறாரா என்பது பற்றிய தேடல் அவசியம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
புதிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிகரிப்பதே 2021ஆம் ஆண்டில் ஐ.டி., சேவைகள் துறையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். ஆய்வில் பங்கேற்ற சுமார் 50 சதவீதம் பேர் ‘சிறந்த இழப்பீடு மற்றும் பலன்கள் இல்லை’ என்பதால் ராஜினாமா செய்வதாகவும், அதேசமயம் 25 சதவீதம் பேர் பணி வளர்ச்சிக்காக ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.