புதுடெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்ட பல தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி தனது டிவிட்டரில், `நாடு சுதந்திர அமிர்த பெருவிழாவினை கொண்டாடி வரும் நிலையில், இந்தாண்டு காந்தி பிறந்த தினம் சிறப்பு பெற்று உள்ளது. காந்தியின் கொள்கைப்படி வாழ்வோம்.
காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்,’’ என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பந்தனவாலு காதி கிராமோத்யோக்கில் உள்ள காந்தி உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர் தனது டிவிட்டரில், “மகாத்மா காந்தி சத்தியம் மற்றும் அகிம்சை வழியில் நடக்கக் கற்றுக் கொடுத்தார்.
அவர் எவ்வாறு அநீதிக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைத்தாரோ அதேபோல, இப்போது இந்தியாவை ஒன்றிணைப்போம் என்று காந்தி ஜெயந்தியான இன்று, உறுதி ஏற்போம்,’ என்று கூறியுள்ளார். இதே நாளில், நினைவு கூரப்படும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடமான விஜய்காட்டில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.