உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு, கான்பூர் மாவட்டம், கதம்பூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 50 பக்தர்கள் டிராக்டர் ஒன்றில் ஏறி பயணம் செய்தனர்.
இவர்கள் அனைவரும் நேற்று கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு மீண்டும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கான்பூர் பாஹாதுனா கிராமத்தின் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது திடீரென திடீரென நிலைதடுமாறிய டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 27 பக்தர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் கான்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் உடனே மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு, அதேப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்தவர்களில் 11 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.