ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப்புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையை கடந்த 1955-ம் ஆண்டு அக்.2-ம் தேதி அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார்.
தொடக்கத்தில், ரயிலின் உட்புறபாகங்களை பொருத்தும் தொழிற்சாலையாக இருந்தது. இதன்பிறகு, படிப்படியாக உயர்ந்து, ரயிலின்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையாக உயர்ந்தது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வேக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது தவிர, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பயணிகளின் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்றபடி, அதிநவீன ரயில் பெட்டி, சுற்றுலாவுக்கான ரயில் பெட்டி உள்பட 50 வகைகளில் 600 வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, “ரயில் -18′ திட்டத்தில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கு உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டன.
ஐ.சி.எஃப்-ல் 1955-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை 70 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளது. அண்மையில், 3-வது வந்தே பாரத் ரயில் தொடர் தயாரித்து வழங்கப்பட்டது.
இந்த ரயில் தற்போது குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே இயக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் (2022-23)50 வடிவமைப்புகளில் 3,500 ரயில்பெட்டிகள் தயாரிக்கவும், 27 வந்தேபாரத் ரயில் தொடர்கள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படிகாலத்துக்கு ஏற்ப, பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களோடு முன்னேறி வரும் ஐ.சி.எஃப். இன்று(அக்.2) 67-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இது குறித்து ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறும்போது, “ஐ.சி.எஃப்-பைஅடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வந்தே பாரத், கரீப் ரத் போன்ற சொகுசு ரயில்கள், பார்சல் ரயில் என்று பல வகைகளில் ரயில் தொடர்கள் தயாரிக்கஉள்ளோம். அடுத்த கட்டமாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை உள்நாட்டிலேயே தயாரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது” என்றனர்.