அம்மன் பெயர் கொண்ட இஸ்லாமிய பெண்ணின் ஜீவசமாதியில், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் கிடா வெட்டி வழிபடுவது, ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் நடந்து வரும் ஆச்சர்யமான பாரம்பர்ய வழக்கம்.
`ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே 300 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டி, தனுஷ்கோடி, சாயல்குடி கடற்கரை பகுதிகளுக்கு வணிகம் செய்வதற்காக மாட்டு வண்டிகளில் வந்த இஸ்லாமியர்கள், சாயல்குடி பிள்ளையார் குளத்தின் கிராமத்தில் தங்கி இருந்தபோது, அங்கு வாழ்ந்த இந்துக்களின் குடும்பங்களுடன் ஒற்றுமையாக பழகி வந்தனர். அப்போது இஸ்லாமிய சிறுமி ஒருவர் பருவம் அடைந்த நிலையில் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்தபோதும், அவர்களுடன் செல்ல மறுத்து, தான் இங்கேயே இருந்து கொள்வதாக அவள் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அங்கேயே விட்டுச் சென்றனர். அப்பெண் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் வளர்ப்பில் வளர்ந்து, கன்னியாக ஜீவசமாதி அடைந்ததார். அவருக்கு ‘அரகாசு அம்மன்’ என இந்துக் கடவுளின் பெயரிட்டு, தர்கா அமைத்து வழிபட்டு வருகிறோம்’ என்கின்றனர் அப்பகுதி கிராமத்தினர்.
தங்கள் கிராமத்தில் ஜீவசமாதி அடைந்த அரகாசு அம்மன், தெய்வமாக இருந்து தங்கள் கிராமத்தை காத்து வருவதாகவும், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டு குல தெய்வமாக அரகாசு அம்மனை வழிபட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறையில், அரகாசு அம்மன் ஜீவ சமாதியில் சந்தனக்காப்பு கந்தூரி திருவிழா கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி திருவிழா கடந்த வாரம் அரகாசு அம்மன் தர்ஹாவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு மவுலீது ஓதப்பட்டு, பின்னர் இந்து மற்றும் முஸ்லிம் மக்களின் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது. பிறகு தர்ஹாவில் புனித சந்தனம், அக்தர் பூசும் நிகழ்ச்சி நடந்தது. பிறைவடி போர்வை போற்றப்பட்டு, மல்லிகை பூ சாரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சவ்வாது, சந்தனம், அக்தர் தெளிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து இரு மதத்தினரும் ஆடு, கோழி என கிடாவெட்டி வழிபட்டனர்.
தங்கள் கிராமத்தில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த இஸ்லாமிய பெண்ணுக்கு விழா எடுத்து மத நல்லிணக்கத்துடன் கொண்டாடப்பட்டு வரும் இந்த கந்தூரி திருவிழாவில் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, கீழக்கரை, ஏர்வாடி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.