வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய வான் எல்லையில் பறந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தை இந்திய விமானப்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஈரான் நாட்டை சேர்ந்த மஹான் ஏர் பயணிகள் விமானம் (ஐ.ஆர்.எம்-081) ஈரானின் தெஹ்ரானில் இருந்து சீனாவின் குவாங்சோ விமான நிலையம் சென்றது. இந்திய வான் எல்லையில் பறந்தபோது இன்று (அக்.,3) காலை 9:20 மணியளவில் விமான நிலைய போலீசாருக்கு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
இந்த அழைப்பு வந்தபோது விமானம், டில்லி விமான நிலையத்தை நெருங்கி இருந்தது. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.
விமானிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, டில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமான நிறுவனம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டு, ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால், சீனாவுக்கே பயணத்தை தொடர்ந்தது. ஆனாலும், இந்திய வான் எல்லையில் பறந்தபோது வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், இந்திய விமானப்படை, விமானத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement