நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதியில் முகாமிடுவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள ஹோம்மேட் சாக்லேட் தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி இரண்டு கிலோ சாக்லேட் உண்டு சென்றது.
இன்று இரண்டாவது முறையாக மீண்டும் சாக்லேட் தொழிற்சாலையின் நுழைவு கதவை உடைத்து விட்டு மீண்டும் சாக்லேட் உண்டுவிட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் இப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிக்கு கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக கரடிகள் ஆபத்தான மிருகமாக பார்க்கப்படுகிறது. மனிதர்களை ஒப்பிடும் போது உடல் அளவில் மிகப்பெரியதாக இருப்பதால் அதன் அருகில் செல்ல பலரும் அச்ச படுவர். மலை சார்த்த பகுதிகளில் வாழும் மக்களை கரடி அடித்து கொன்றது என்ற செய்திகளை பல முறை கேட்டு இருப்போம். இதனால் குன்னூர் பகுதியில் வாழும் மக்கள் தற்போது அச்சத்துடன் உள்ளனர்.