ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் அக்.2-ம் தேதி வீடு வீடாக காதி துணி விற்பனை: ஒரே நாளில் ரூ.1 கோடி வருவாய் ஈட்ட கைத்தறி துறை இலக்கு

சென்னை: தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறை, அமெட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னையில் நாளை (அக்.2) மாணவர்கள் மூலம் வீடு வீடாக காதி துணைகளை விற்க திட்டமிட்டுள்ளது. அன்று ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்பிலான துணிகளை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து தமிழக காதி மற்றும் கைத்தறித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் தரமான, விலை குறைவான காதி மற்றும் கைத்தறித் துணிகளை கண்கவரும் வடிவமைப்புடன் நெய்வதை தொழிலாக கொண்டுள்ளனர். பிற நிறுவனங்கள் பெரும் செலவில் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் வெளிச்சந்தையில் அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், வியாபாரப் போட்டி சந்தையில், பல கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளை விற்பனை செய்வதில்சிரமம் உள்ளது. இதனால் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்கஇயலாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையின்கீழ் நெசவுப் பணி செய்யும் நெசவாளர்களுக்கு உதவும் வகையில், அவர்களால் தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும்பொருட்களை, காந்தி பிறந்த நாளான அக்.2 ம் தேதி (நாளை) வீடு வீடாக சென்று விற்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அமெட் பல்கலைக்கழகத்தின் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில் வீடு வீடாக சென்று காதி துணிகளை விற்பனை செய்யும் சமூக சேவை திட்டத்தை முன்னெடுக்கின்றனர். அதன்படி, ஒரே நாளில் குறைந்தது ரூ.1 கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளுடன், கிராமப் பொருட்களையும் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாங்கி உதவ வேண்டும்: இத்திட்டத்தை 2-ம் தேதி காலை 6.30 மணிக்கு அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் ரூ.1 கோடிக்கு காதி, கைத்தறி பொருட்கள் விற்பனை செய்ய முடியும்போது, தமிழகத்தில் உள்ள 59 பல்கலைக்கழகங்கள், 2,140 கல்லூரிகளில் படிக்கும் 17.42 லட்சம் மாணவர்களைக் கொண்டு இப்பொருட்களை முழுமையாக விற்பனை செய்ய இயலும். இந்த திட்டத்தை, கைத்தறித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அமெட் பல்கலைக்கழக துணைவேந்தர் க.திருவாசகம், கைத்தறித் துறை ஆணையர் டி.பி.ராஜேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் பொ.சங்கர் உள்ளிட்டோர் முன்னெடுத்துச் செல்கின்றனர். எனவே, இரு சாலைகளிலும் வசிக்கும் பொதுமக்கள் காதி, கைத்தறி துணிகள் மற்றும் கிராமப் பொருட்களை வாங்கி இந்த புதியமுயற்சிக்கு உறுதுணையாக இருந்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.