ஐதராபாத்தில் கடந்த மே மாதம் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைதாகியிருந்த ஆறு பேரில் ஐந்து பேர் 18 வயது நிரம்பாதவர்களாக இருந்தனர். இந்த ஐந்து பேரில் நான்கு பேரை, பெரியவர்களாகக் கருத்தில் கொண்டு விசாரணையை தொடரலாம் என ஐதராபாத் சிறார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இது சாத்தியமானது எப்படி?
சிறார் நீதிச்சட்டம் 2015-ம் திருத்தச் சட்டத்தின்படி, 16 வயதை தாண்டிய சிறுவர்கள் எவரேனும் கொடூரமான குற்றத்தை செய்திருந்தால், அவர்களை பெரியவர்களாக கருத்தில் கொண்டு விசாரணை நடத்தலாம். விசாரணையின் தொடக்கமாக, 16 – 18 வயதுடைய அந்த சிறுவர்களின் மனநிலன் மற்றும் உடல்நலன் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். குறிப்பாக அவர்கள் இந்த குற்றத்தை செய்ய சாத்தியமுள்ளதா என்று ஆராய வேண்டும்.
இப்படி கொள்வதன் மூலம் என்ன பலன்?
இப்படி கணக்கில் கொள்ளப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுகையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தங்களின் 21-வது வயது வரை கண்காணிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் சிறைக்கு மாற்றப்படுவர். ஒருவேளை இவர்கள் பெரியவர்களாக கணக்கில் கொள்ளப்படாமல் விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபணமானால், அதிகபட்சமாக 3 வருடங்கள் இவர்கள் கண்காணிப்பு இல்லத்தில் வைக்கப்படுவது மட்டுமே விதி. இவர்களுக்கு ஆயுள் தண்டையோ மரண தண்டனையோ விதிக்க முடியாது, விடுதலை தேதி அறிவிக்கப்பட வேண்டும் என்பது விதி.
குறிப்பிட்ட இந்த வழக்கு என்ன?
ஐதராபாத் கூட்டு பாலியல் வழக்கில், காவல்துறையின் தகவலின்படி, மே 28-ம் தேதி, 17 வயது சிறுமியொருவர், தனது நண்பருடன் பார்ட்டியொன்றுக்கு சென்றபோது, அங்கிருந்த ஆறு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். அந்த நபர்கள், அச்சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறிவிட்டு, மறைவான ஓர் இடத்திற்கு அச்சிறுமையை கடத்திச்சென்று, அங்கு வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
இந்த வன்கொடுமை குறித்து, அச்சிறுமி தன் பெற்றோரிடம் மே 31-ம் தேதி தெரிவித்துள்ளார். அதன்பின் பெற்றோர் உதவியுடன் காவல்துறையிடம் புகார் அளித்து, வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக கைதான ஆறு பேரில், 5 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டது. இவர்களில் ஒரு சிறுவன், எம்.எல்.ஏ ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் அந்த எம்.எல்.ஏ தன் மகனுக்கும் இந்த குற்றத்துக்கும் தொடர்பில்லை எனக் கூறிய நிலையில், பின்னர் அது நிரூபிக்கப்பட்டதால், காவல்துறையினர் அச்சிறுவனின் பெயரையும் குற்றவாளிகள் பெயரில் சேர்த்துக் கொண்டனர். ஐதராபாத் சிறார் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கைதான ஆறு பேரும் இனி பெரியவர்களாக கருதப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
– இன்பென்ட் ஷீலா