காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே தெரியம்பாக்கத்தில் கிடங்கில் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில், தொழிற்சாலை மற்றும் உணவகங்களுக்கு தேவையான ராட்சத கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் குடோன் உள்ளது. இந்த குடோனை ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார். இதில் வடமாநிலங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி இரவு தனியார் கேஸ் குடோனில் திடீரென கரும்புகையுடன் பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதில், அங்கிருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 நவீன தீயணைப்பு வாகனங்களுடன் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி, குடோனில் சிலிண்டர்களை அகற்றி தீயை அணைத்தனர். இவ்விபத்தில், அங்கிருந்த தேவரியம்பாக்கத்தை சேர்ந்த பூஜா (19), மாணவர் கிஷோர் (13), கோகுல் (22), சந்தியா (21), நிவேதா (21), குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், சண்முகசுப்ரியன், ஆமோத்குமார், தமிழரசன் (10), குடவாசல் அருண் (22), குணால் (22) உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஒரகடம் போலீசார் விரைந்து வந்தனர்.
அங்கு படுகாயம் அடைந்த 12 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில், 5 பேருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால், நள்ளிரவில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள 7 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே ஆமோத்குமார், குடோன் உரிமையாளரின் மகள் சந்தியா, குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கேஸ் குடோன் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.