அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வந்த 2-ம் கட்ட அகழாய்வு பணி நேற்றுடன் நிறைவடைந்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ராஜேந்திர சோழன், மாளிகைமேடு பகுதியில் அரண்மனை கட்டி வாழ்ந்து வந்துள்ளார். அவரது ஆட்சிக்குப் பின்னர், அந்த மாளிகைமேடு மண்மேடுகளால் மூடப்பட்டு, காணாமல் போனது.
இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 1986-1996 வரை 4 கட்டங்களாக இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில், மாளிகையின் செங்கற்களாலான சுற்றுச்சுவர்கள் கண்டறியப்பட்டன. மேலும், பல்வேறு அரிய வகைப் பொருட்களும் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கியது.
மாளிகைமேடு பகுதியில் ஏற்கெனவே ஆராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் அருகில் 15 மீட்டர் தொலைவில் 10-க்கு 10 அளவிலான குழிகள் தோண்டப்பட்டு, கொக்கி, களைவெட்டிகளின் உதவியுடன் பழமையான பொருட்கள் உள்ளனவா என தேடும் பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதில், சோழர் காலத்தைய அரண்மனையில் எஞ்சிய செங்கற்களால் ஆன 2 அடுக்கு சுவர்கள் கொண்ட பகுதி கண்டறியப்பட்டது. மேலும், தங்கத்தாலான காப்பு, மனித உருவம் கொண்ட பொருள், நாணயங்கள், இரும்பாலான ஆணிகள், சீன மண்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், செம்பு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கப் பெற்றன.
இந்நிலையில், இந்த அகழாய்வு பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இங்கு கண்டறியப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அகழாய்வின்போது கிடைக்கப்பெற்ற பொருட்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தால் சிறப்பாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.