கமுதி: கமுதி அருகே விவசாய நிலங்களில் தாழ்வாகச் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கப்படை, கீழவலசை உள்ளிட்ட பகுதிகளில் உயர் அழுத்த மின் கம்பிகள் வயல்வெளிகளில் கைக்கு எட்டும் உயரத்தில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் உழவுப் பணிகளை மேற்கொள்ள டிராக்டர்கள், அறுவடை காலங்களில் நெல் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களை அவ்வழியாக கொண்டு செல்ல முடியவில்லை. விவசாயப் பணிகள் பாதிக்கின்றன.
பலத்த காற்று வீசினால் மின் கம்பி அறுந்து அவ்வழியே நடந்து செல்வோர் மீது விழும் அபாயம் உள்ளது. தற்போது கமுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் விதைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், செங்கப்படை பகுதியில் உள்ள விவசாயி அர்ஜுனன் உள்ளிட்ட பலர், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மின் கம்பிகளை சீரமைக்குமாறு கமுதி மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி விவசாயிகள் புகார் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளின் நலன் கருதி விளைநிலங்களில் தாழ்வாகச் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.